மரணமடைந்து 12 ஆண்டுக்கு பின்னும் சாதிக்கும் மைக்கேல் ஜாக்சன்..!

 

உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞரும், பாடகரும், டான்சருமான மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பாப் பாடலின் ராஜா என போற்றப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அந்த சமயத்தில் உலகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

எம்.ஜே. என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் தனது மரணத்துக்கு பிறகும் தன்னுடைய ஆல்பங்களால் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

அவர் வெளியிட்டு உள்ள 10 ஆல்பங்களை பல லட்சக்கணக்கானோர் வாங்கி உள்ளனர். அவற்றில் சில ஆல்பங்கள், இன்னும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகின்றன.

அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் 6-வது ஆல்பமான திரில்லர், அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

1982-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வெளியான திரில்லர் ஆல்பம் உலகம் முழுவதும் அப்போது பட்டையை கிளப்பியது. 1983-ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஆல்பங்களில் முதலிடம் பிடித்தது திரில்லர்.

அந்த காலக்கட்டத்தில் பல மேலை நாடுகளில் திரில்லர் இசை ஒலிக்காத வீடுகளே இல்லை, அதை கேட்காத நபர்களே இல்லை என்னும் அளவுக்கு தனது இசையால் உலகத்தை கட்டிப்போட்டார் மைக்கேல் ஜாக்சன்.

அமெரிக்காவில் மட்டும் மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் ஆல்பத்தின் விற்பனை 34 மில்லியன் என்ற புதிய சாதனையை இந்த வாரம் படைத்து உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஆல்பங்களின் வரிசையில் திரில்லர் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Contact Us