பிஞ்சு குழந்தையை கொடூர சித்ரவதை செய்த தாய், வீடியோவால் சிக்கிய அரக்கி

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தனது 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் மீது குழந்தை வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (26). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த துளசி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்தது

இதனால், கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த கோவத்தை தனது இளைய மகன் 2 வயதான சிறுவனை துளசி கண்மூடி தனமாக அடித்து தாக்கி வந்துள்ளார். ஊசி, செருப்பு ஆகியவற்றை கொண்டு அந்த பிஞ்சுவை அடிக்கும்போதெல்லாம் அதனை செல்போனில் வீடியோ எடுத்துக்கொள்வதும் துளசியின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் குழந்தையை ரத்தம் வரும் அளவிற்கு அடித்து கொடுமை படுத்திய துளசி பின்னர் அவரே ஜிப்மர் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைக்கு என்னாச்சு என்று கேட்டபோது கணவன், மனைவி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது துளசியின் செல்போனை எடுத்து பார்த்தபோது மகனை அவர் அடித்து தாக்கும் வீடியோக்கள் இருப்பதை பார்த்து வடிவழகன் பேரதிர்ச்சி அடைந்தார். உடனே மனைவியை ஆந்திராவில் உள்ள மாமனார் வீட்டுக்கு கூட்டிச் சென்று அங்கேயே விட்டுவிட்டு விழுப்புரத்துக்கு வந்துள்ளார்.

இதற்கிடையில் துளசி குழந்தையை அடித்து கொடுமை செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியதால் விழுப்புரம் போலீசார் துளசி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்க போலீசார் ஆந்திராவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே குழந்தையை துளசி பல்வேறு வகைகளில் அடித்து கொடுமை செய்ததாகவும் வடிவழகன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us