ஆப்கானிஸ்தானில் கடைசி மாகாணத்தையும் கைப்பற்றிய தலிபான்கள்!

 

அமெரிக்க படைகள் ஆப்கானில் இருது வெளியேறியதை அடுத்து, தலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு நாடு வந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த கடைசி மாகாணமான பஞ்ஷிரை முழுமையான கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதனை பதில் கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சரும், தலிபானின் செய்தி தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாடு தழுவிய பாதுகாப்பை நிறுவுவதற்கான தமது முயற்சிகள் பலனளித்ததாகவும், அந்த மாகாணம் அல்லாஹ்வின் (கடவுள்) உதவி மற்றும் மக்களின் ஆதரவால் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களால் பஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை. முன்னைய சோவியத் படைகள், தலிபான்களின் கடந்த ஆட்சிக்காலத்திலும் பஞ்ஷிருக்குள் படைகள் நுழைய முடியவில்லை.

இயற்கை அரணாண அந்த பகுதியை தலிபான் எதிர்ப்பாளரான அஹ்மத் மசூத் அந்த பகுதியை கட்டுப்படுத்தி வந்ததுடன் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சாலேயும் அவருடன் இணைந்திருந்தார். இந்நிலையில் பஞ்ஷிரை கைப்பற்ற தலிபான்கள் படையெடுத்ததை தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக தலிபான்களுக்கும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்களைக் நிகழ்ந்தன.

தலிபான்களின் தகவல்படி, எதிர்ப்புப் படைகளின் ஒரு பகுதியினர் கொல்லப்பட, ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். “பஞ்ச்ஷிர் மக்கள் பாரபட்சமான நடத்தைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம், அவர்கள் எங்கள் சகோதரர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக கூட்டாக பணியாற்றுவோம்.” என ஜபியுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்ஷிர் மாகாணத்தில் நேற்றிரவு நடந்த மோதலில், எதிர்ப்புப் படைகளின் முக்கிய தளபதி ஜெனரல் அப்துல் வோடோட் மற்றும் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஃபாஹிம் தஷ்டி ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக, எதிர்ப்பு முன்னணியின் இணைத் தலைவர் அஹ்மத் மசூத் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் அஹ்மத் மசூத், அம்ருல்லா சாலே ஆகியோர் அங்கிருந்து தஜிகிஸ்தானிற்கு தப்பிச் சென்றிருக்கலாமென கருதப்படுகிறது.

Contact Us