மங்காத்தா செகண்ட் பார்ட்.. வெங்கட்பிரபுவின் மூலம் தலைக்கு தூது விட்ட ஹர்பஜன் சிங்

 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி உள்ளார். இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள பிரண்ட்ஷிப் படம் மூலமாக ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா நடித்துள்ளார்.

நடிகை லாஸ்லியாவும் இப்படம் மூலமாகவே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் பாடகர் தேவாவுடன் இணைந்து நடிகை லாஸ்லியா இப்படத்தில் பாடியுள்ள அடிச்சி பறக்கவிடுமா பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தான் பிரண்ட்ஷிப் படத்தின் டிரைலரை இன்று பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை ரீ ட்வீட் செய்த ஹர்பஜன் சிங், “வெங்கட் ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க” என்று கோரியுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மீது அதிக பற்று கொண்டுள்ள ஹர்பஜன் சிங் சமீபகாலமாகவே தமிழில் தான் அவரது ட்விட்டரில் பதிவுகளை செய்து வருகிறார். ஹர்பஜன் சிங் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பிளாக் சீப் என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பான வெப் தொடர் ஒன்றில் திருவள்ளுவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us