விளக்கமறியலில் இருக்கும்போதும் சண்டித்தனம் காட்டிய ரிஷாத்

 

விளக்கமறியலில் இருக்கும்போதும் ரிஷாத்தின் சண்டித்தனமான செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் வீட்டில் 16 வயதான மலையக சிறுமி ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், முதலாம் சந்தேக நபரான தரகர் பொன்னையா பாண்டாரம் அல்லது சங்கர், நான்காவது சந்தேக நபர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் ஆகிய இருவரை மட்டும் பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதித்தது.

இது தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இந்த விவகாரத்தில் 2 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், 3 ஆம் சந்தேக நபரான ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆயிஷா ஆகியோரின் பிணைக் கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்ததுடன் , அவர்களையும் 5ஆவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று வழக்கின் 5 ஆவது சந்தேக நபராக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் மீளவும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இதுவரை இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கினார்.

அதன்படி, கடந்த தவணையின்போது, பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்ட, ஒரு புகைப்படத்தை மையப்படுத்தி அது ஹிஷாலினியா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

சிறுவர் மற்றும் மகளிர் குற்ற நிவாரண பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரிக்கு தனிப்பட்ட ரீதியில் அனுப்பப்ட்டிருந்த அந்த புகைப்படம், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒருவரை சித்திரவதை செய்துள்ளதை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், அந்தப் புகைப்படம் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளில், அது ஹிஷாலினி இல்லை எனவும் மாலபே பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒருவரின் புகைப்படம் எனவும் தெரிய வந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.

அத்துடன் அந்த புகைப்படம் எந்த வகையிலும் இவ்வழக்குடன் தொடர்புபட்டது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அங்கு தொடர்ந்தும் நீதிமன்றில் விடயங்களை வெளிப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,

‘1990 அம்பியூலன்ஸ் சேவையில், ஹிஷாலினியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றமை தொடர்பிலான ஆவணங்கள் சுவ செரிய மன்றத்திடமிருந்து விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளன. அதன்படி, பி.ரி. ருவன் பத்திரண என்பவரே அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பெடுத்துள்ளார்.

அழைத்தவரின் பெயரை கேட்டபோது, ‘ ருவன் பத்திரண என போட்டுக் கொள்ளுங்கள்’ என வேண்டா வெறுப்பாக பதிலளித்ததாக பெறப்பட்ட வாக்குமூலத்தில் தெரிய வந்தது.

அப்போதும் அம்பியூலன்ஸ் வண்டிக்கும் ருவன் பத்திரண என்பவரால், கேஸ் அடுப்பிலிருந்து பரவிய தீயால் ஏற்பட்ட காயம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான குரல் பதிவும் உள்ளது. இந்த அம்பியூலன்ஸுக்கு அழைத்த, ருவன் பத்திரண பொலிஸ் சார்ஜனாவார்.

அவர் 5 ஆம் சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன் பாதுகாப்பு உத்தியோகத்தவராக கடமையாற்றுபவர். இந்நிலையில், ஹிஷாலினியை வைத்தியசாலைக்கு அழைத்துந் சென்றதும் அங்கு முதலில் அவரை பரிசோதனை செய்த வைத்தியர் பசில் டெரஸ் டெம்பேர்ட் பெரேரா என்பவராவார்.

அவரிடம் 2 ஆவது சந்தேக நபர், கேஸ் காரணமாக ஏற்பட்ட காயம் என்றே கூறியுள்ளார். எனினும் அந்த வைத்தியரின் குறிப்பில் ‘ கேஸ் ‘ என உள்ள இடங்களில் கேள்விக் குறி இடப்பட்டுள்ளது. வைத்தியரிடம் அது தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலத்தில், 2 ஆவது சந்தேக நபர் ‘ கேஸ்’ சம்பந்தப்பட்ட காயம் எனக் கூறினாலும் மண்ணெண்னெய் வாடை வந்ததால் தான் கேள்விக் குறியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் ஹிஷாலினி தீ பரவலுக்கு உள்ளான பின்னர், குறித்த வீட்டுக்கு அவரது பெற்றோர் சென்றபோது , அங்கு பிரதன பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இருந்தமை ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டது.

இதற்கு மேலதிகமாக ரிஷாத்தின் வீட்டில் கடந்த 2006 முதல் சேவையாற்றி வரும் சாரதியான ரிஸ்வி என்பவரின் வாக்குமூலத்துக்கு அமைய அங்கு ஒரு சட்டத்தரணியும் இருந்துள்ளதாக குறிப்பிடப்ப்ட்டுள்ளது.

பொலிஸார், சட்டத்தரணி உள்ளிட்டோர் யாரால் அங்கு அழைக்கப்பட்டார்கள், அவர்களின் ஆலோசனைக்கு அமைய சம்பவ இடம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டதா? போன்ற விடயங்கள் குறித்து விசாரிக்கப்படுகின்றன.

சட்டத்தரணியின் பெயரை நான் இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் எதற்காக சென்றார் என உறுதியாக தெரியாத நிலையில் அவரது பெயரை வெளிப்படுத்த முடியாது. எனினும் குறித்த சட்டத்தரணி தொடர்பில் ஹிஷாலினியின் பெற்றோரின் வாக்குமூலத்தில் எதுவும் கூறப்படவில்லை. 4 ஆவது சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை மையப்படுத்திய விசரணைகள் தொடர்கின்றன.

பழுதடைந்துள்ள அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தகவல்களைப் பெற அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவ்வறிக்கை கிடைக்கவில்லை. அத்துடன் அவரது தொலைபேசியை மையப்படுத்திய தொலைபேசி கோபுர தகவல்களைப் பெற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த ஜூன் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையும் ஜூலை 13 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதியின் பின்னரும் கொழும்பில் இருந்துள்ளார். எனினும் அவர் அந்த கோபுர தகவல்களை மறுத்து வாக்குமூலமளித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவர் அந் நாட்களில் அங்கு இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார். எனவே அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காத ஒரு நிலைமையே நிலவுகிறது. 5 ஆவது சந்தேக நபராக ஆஜர் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவர் வேறு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளார்.

அவ்வாறு இருக்கும்போதே அவரின் சண்டித்தனமான செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. சிறை வைத்தியருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக இந்த நீதிமன்றுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரம் கழிவதற்கும் முன்னர், அவர் சிறையில் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது இந்த தொலைபேசி தேசிய உளவுச் சேவையின் பொறுப்பில் உள்ளது. ரிஷாத் பதியுதீன் அதனை வீசி எறிந்த பின்னர் அது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Contact Us