கனடாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தல்.. பிரச்சாரம் நடத்த வந்த பிரதமர் மீது தாக்குதல்..!!

 

கனடாவின் பொதுத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், முன்பே தேர்தல் நடக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வரும் 20ஆம் தேதி அன்று நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. எனவே பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் பரபரப்பாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள்.

எனினும், கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பிரதமரின் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்படுகிறது. ஒன்ராரியோ மாகாணத்தில் பிரதமர் கடந்த வாரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு முடிவெடுத்திருந்தார். ஆனால் பிரச்சாரம் நடக்கவுள்ள இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு பிரதமரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

எனவே, அவர் பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஒன்ராரியோ மாகாணத்தில் இருக்கும் லண்டன் நகரத்தில் பிரதமர் பிரச்சாரத்தை நடத்தி விட்டு தன் வாகனத்தில் ஏறும்போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் குப்பைகளை அவர் மேல் வீசி எறிந்தார்கள்.

இதில் பிரதமரின் மேல் சில கற்கள் விழுந்துவிட்டது. அதன் பின்பு, பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றார்கள். இந்த தாக்குதலில் பிரதமருக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளனர்.

Contact Us