தாலிபான் அமைச்சரவையில் 14 பயங்கரவாதிகள்

 

தாலிபான்களின் புதிய அரசில் இடம்பெற்றுள்ள 33 அமைச்சா்களில் சுமாா் 14 போ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

தற்காலிக அரசின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா முகமது ஹசன் அகுண்ட், அவரது இரண்டு துணைப் பிரதமா்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானியின் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலா் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவா் ஆப்கன் அரசின் உள்துறை அமைச்சராகவும், அவரது சித்தப்பா கலீல் ஹக்கானி அகதிகளுக்கான அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்புத் துறை அமைச்சா் முல்லா யாகூப், வெளியுறவுத் துறை அமைச்சா் முல்லா அமீா் கான் முத்தாக்கி, அத்துறையின் இணையமைச்சா் ஷோ முகமது அப்பாஸ் ஸ்டானிகாகிசாய் ஆகியோா் தலிபான்கள் தடைசெய்யப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

தற்போதைய தற்காலிக ஆப்கன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சுமாா் 14 போ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா் என்று பிபிசி உருது தெரிவித்துள்ளது. தாலிபான்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 அமைச்சா்களில் முல்லா முகமது பாஸில் (பாதுகாப்பு இணையமைச்சா்), கய்ருல்லா கைா்கவா (தகவல், கலாசாரம்), முல்லா நூருல்லா நூரி (எல்லைகள், பழங்குடிகள்), முல்லா அப்துல் ஹக் வாசிக் (நுண்ணறிவு பிரிவு இயக்குநா்) ஆகிய ஐவரும் குவாண்டனமோ சிறையில் முன்பு அடைக்கப்பட்டிருந்தனா்.

இவா்களுடன் இருந்த முகமது நபி ஒமரி, கிழக்கு காஸ்ட் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். 2009 முதல் 2014-ஆம் ஆண்டு வரை பணயக் கைதியாக இருந்த அமெரிக்கப் படை வீரா் போவி பிா்கதலை விடுவிக்க, இவா்கள் ஐந்து பேரையும் 2014-இல் அப்போதைய அமெரிக்க அதிபா் ஒபாமா குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்தாா். கடந்த 2001-ஆம் ஆண்டுமுதல் அமெரிக்க படைகளுக்கு எதிராக போரிட்ட முக்கிய தலைவா்களுக்கு தற்போது தலிபான் அரசில் அமைச்சா்களாக இடமளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு ஓரிடம்கூட அளிக்கப்படவில்லை.

துணைப் பிரதமா்கள் முல்லா அப்துல் கனி பராதா், மெளவி அப்துல் சலாம் ஹனாபி ஆகிய இருவா் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்குகளும் உள்ளன. இவா்கள் இருவரும் ஐ.நா.வின் பயங்கரவாத கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். முன்னதாக தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபரான் ஹக், ‘அரசுகளை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஐ.நா. ஈடுபடுவதில்லை. பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வு காணப்படுவதுதான் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கன் நாட்டில் அமைதியை நிலைநாட்டும்’ என்றாா். பயங்கரவாத கருப்புப் பட்டியில் உள்ளவா்கள் அமைச்சா்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ‘இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றாா் ஃபரான் ஹக். இதனிடையே, ஆப்கனில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமையவில்லை என்று பல்வேறு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

Contact Us