‘இணைந்து செயல்படுவோம்’…. மன்னிப்பு வழங்கப்படும்…. அழைப்பு விடுத்த தலீபான்களின் முக்கிய தலைவர்….!!

 

ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” ஆப்கானின் முன்னால் ஆட்சியின் போது பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் தைரியமாக நாடு திரும்புங்கள். அதிலும் தூதரகங்கள் அவற்றின் அதிகாரிகளுக்கும் நாங்கள் முழு பாதுகாப்பை தருகிறோம். எங்கள் பழைய ஆட்சியில் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் பண விரயத்தை சந்தித்து விட்டோம். குறிப்பாக ஆப்கானில் மக்கள் ரத்தம் சிந்திய பயங்கரமான சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் என்று அனைத்தும் முடிவடைந்து விட்டன. அதற்கான கூலியையும் நாங்கள் கொடுத்து விட்டோம்.

இப்பொழுது இருக்கும் தலீபான்கள் நல்ல முறையில் பக்குவமடைந்துள்ளனர். நாங்கள் எவரையும் பழி தீர்க்கும் விதமாக கொலைகள் செய்யவில்லை. இந்த நிலையில் தற்பொழுது ஆப்கானில் இஸ்லாமிய சட்டப்படி அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும். மேலும் நல்ல திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும். ஆகவே இறைவனது அருளைப்பெற்று அனைவரும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக அழைப்பு விடுக்கிறேன். குறிப்பாக அமெரிக்கா உடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். எனவே அனைவரும் ஆப்கான் திரும்புங்கள்” என்று கூறியுள்ளார். இந்த தலீபான்கள் அமைச்சரவையில் 33 பேர் கொண்ட குழு உள்ளது.

அதில் 14 பேர் 1996ல் தலீபான்கள் ஆட்சியில் இடம் பெற்றவர்கள், 5 பேர் அமெரிக்காவின் குவான்டனாமோ சிறையில் இருந்தவர்கள், மேலும் 12 பேர் இரண்டாம் தலைமுறை தலீபான்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர். இதனையடுத்து தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆப்கானியர்களே அந்நாட்டை விட்டு வெளியேறினர். அதிலும் அமெரிக்கா படைகளுக்கு ஆதரவளித்த அனைவரும் தலீபான்களுக்கு பயந்து தப்பி ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us