கனடா தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் மீது தாக்குதல்… கனடாவில் தொடரும் இனவெறுப்பு சம்பவங்கள்

 

கனடாவில் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியின வேட்பாளர்கள் தொடர்ந்து இன ரீதியில் தாக்கப்பட்டு வருகின்றனர். கால்கரியில் வாழும் Sabrina Grover என்ற வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற தன்னார்வலர்கள் இருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்ததுடன், அவர்கள் மீது எச்சில் துப்பியிருக்கிறார். அவர்கள் இருவரும் இந்த எதிர்பாராத தாக்குதலால் ஆடிப்போயிருக்கிறார்கள்.

NDP கட்சியின் தலைவரான Jagmeet Singh ஒன்ராறியோவிலுள்ள விண்ட்சரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சென்ற ஒருவர், உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டிருக்கிறார். இந்திய வம்சாவளியினரானாலும் Jagmeet Singh, Scarboroughவில் பிறந்து விண்ட்சரில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமயமாக்கல் உலகத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்துவிட்ட நிலையிலும், இன்னமும் சின்ன மனம் கொண்ட மக்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் வாழ்வது பரிதாபம்தான்.

இந்தியாவில் வாழும் ஒருவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மொபைலை அமெரிக்க நிறுவனமான அமேசானில் வாங்கி, இங்கிலாந்து நிறுவனமான வோடபோன் சிம் கார்டை போட்டு, சுவிஸ் நிறுவனமான நெஸ்லேயின் தயாரிப்பான மேகியை சாப்பிட்டுக்கொண்டே, நியூசிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கலாம். உலகம் அவ்வளவு சுருங்கிவிட்டது.

ஆனாலும், சிலரது மன நிலைமை மட்டும், என் நாடு எனக்கு மட்டுமே என்ற குறுகிய அளவிலேயே இருக்கிறது.

ஒவ்வொரு நாடும், என் நாடு எனக்கே, என் நாட்டு தயாரிப்புகள் என் நாட்டுக்கே, நான் அதை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்று நினைத்தால், ஏற்றுமதியும் நடக்காது, இறக்குமதியும் நடக்காது. விளைவு மோசமாக இருக்கும்.

அப்படி இருக்கும் நிலைமையிலும், இன்னமும் மக்கள் உன் நாட்டுக்குப்போ என ஒரு நாட்டவரைப் பார்த்துக் கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது!

Contact Us