சிறைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய இராஜாங்க அமைச்சர்

 

சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே , தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னலம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் இவ்வாறு இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ம் திகதி சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து வந்து அவர்களை மண்டியிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த இடத்திலேயே கைதிகளை கொன்றுவிடுவதாக அமைச்சர் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ராஜாங்க அமைச்சரின் இந்த செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்யைமாகக் கண்டிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில அரசியல் கைதிகள் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் சில தசாப்தங்களாகவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுவதனை தவிர்ப்பதில் பாண்டியத்தியம் பெற்றுக்கொண்டுள்ளது எனவும் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்படாது என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை குறித்த இணை நாடுகளிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Contact Us