பரிஸில் காதலியை சுடச்சென்ற நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

 

பரிஸில் தனது முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுடச்சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு 18 ஆம் வட்டார காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினரால் நன்கு அறியப்பட்ட ஒருவர் தனது முன்னாள் காதலி வீட்டுக்குள் நுழைவதை கண்டுள்ளனர். குறித்த நபரை அவரது வீட்டுக்குச் செல்லக்கூடாது என பணிக்கப்பட்டுள்ளதை அறிந்த காவல்துறையினர், அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

இச்செயலால் ஆத்திரமடைந்த குறித்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கைப்பாக்கியை எடுத்தார். காவல்துறையினரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட முற்பட்டபோது, அதிஷ்ட்டவசமாக துப்பாக்கி இயங்கவில்லை. பல முறை சுட முற்பட்டும் துப்பாக்கி செயற்படவில்லை.

அதற்குள் சுதாகரித்துக்கொண்ட காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி பிடித்து, கைது செய்தனர். பின்னர் விசாரணைகளில், குறித்த நபர் தனது முன்னாள் காதலிக்கு அச்சுறுத்தல் காணொளி ஒன்று அனுப்பியுள்ளதாகவும், அதில் கைத்துப்பாக்கியுடன் குறித்த நபர் தோன்றியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை, சம்பவத்தின் போது குறித்த நபர் தனது முன்னாள் காதலியை சுட்டுக்கொல்வதற்காகவே அங்கு வந்திருந்தமையும் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Contact Us