மும்பையில் 15 வயதுச் சிறுமியை மிரட்டி 29 பேர் கூட்டு சிறார் வதை; 26 பேர் கைது!

 

மும்பை அருகில் உள்ள டோம்பிவலியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை, அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் சிறார் வதைக்கு உள்ளாக்கி அதைத் தனது மொபைலில் பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து, அந்த நபர் அச்சிறுமியிடம் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, தன் நண்பர்களுடன் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு சிறார் வதைக்கு உள்ளாக்கியிருக்கிறார். மொத்தம் 29 பேர் இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டனர். அவர்களது தொடர் தொல்லை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுமி, புதன்கிழமை இரவு மான்பாடா போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளுக்கு எதிராகப் புகார் செய்தார்.

உடனே விரைந்து செயல்பட்ட போலீஸார் இக்காரியத்தில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர். எஞ்சியவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறார் வதை சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் குடியரசுக்கட்சி தொண்டர்கள் போலீஸ் நிலையம் முன்பு கூடி குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்நவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் வித்யா சவான் இது குறித்துக் கூறுகையில், “கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி குறித்துக் கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

ஆனாலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெண்கள் கோபத்தில் இருக்கின்றனர். குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்போம். குற்றவாளிகளில் சிலர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பாரபட்சமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மைனர்கள். கூடுதல் கமிஷனர் தத்தாத்ரேயா இது குறித்து கூறுகையில், “கூட்டு சிறார் வதை சம்பவம் ஜனவரி 29-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 22-ம் தேதி வரை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன்தான் முதலில் இக்காரியத்தில் ஈடுபட்டு வீடியோ எடுத்துள்ளான். அதைக் காட்டி மிரட்டி 4 அல்லது 5 சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறார் வதை செய்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரிக்க உதவி கமிஷனர் சோனாலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி 33 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் 2 மைனர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிவர்களைத் தேடி வருகிறோம்” என்றார்.

Contact Us