வன்புணர்வு செய்யப்பட்ட விமானப்படை பெண் அதிகாரிக்கு பெண் உறுப்பில் பரிசோதனை!! வலுக்கும் எதிர்ப்பு

 

தமிழ்நாட்டின் கோவையில் உள்ள இந்திய விமானப்படை கல்லூரியில் தன்னை ஆண் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 28 வயது பெண் அதிகாரி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்த நிலையில், சட்டவிரோதமாக தம்மை விமானப்படை மருத்துவர்கள் இரு விரல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியே முதல் அறிக்கையில் கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான செய்தி சில ஊடகங்களில் வெளியான நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, இந்திய விமானப்படை தளபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனி உரிமை மற்றும் மதிப்பை மீறும் வகையிலும் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற விவகாரங்களில் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையிலும் இரு விரல் பரிசோதனை நடத்திய இந்திய விமானப்படை மருத்துவர்களின் செயல் தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஏமாற்றத்தை தருகிறது என்றும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா கூறியுள்ளதாக அந்த ஆணையம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, அரசாங்கமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் 2014ஆம் ஆண்டில் அறிவித்தபடி இருவிரல் பரிசோதனை முறை அறிவியல் பூர்வமற்றது என்பது குறித்து இந்திய விமானப்படை மருத்துவர்களுக்கு புரிய வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரேகா சர்மா கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 29 வயதாகும் ஆண் அதிகாரி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த பெண் அதிகாரி புகார் தெரிவித்தவுடனேயே அந்த ஆண் அதிகாரி மாவட்ட நீதிபதி முன்பு சரண் அடைந்தார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி அளித்த பாலியல் வன்புணர்வு புகாரை விமானப்படையே விசாரிக்க முடியும். அதை உள்ளூர் காவல்துறை விசாரிக்க வரம்பு இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியும் விமானப்படை தரப்பும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீது முடிவு எடுக்கும்வரை குற்றம்சாட்டப்பட்ட ஆண் அதிகாரியை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விமானப்படையே விசாரிக்கலாம் என்று நீதிபதி மகேஸ்வரி இன்று உத்தரவிட்டிருக்கிறார்.

ஃபிளைட் லெப்டிணன்ட் அந்தஸ்தில் உள்ள ஆண் அதிகாரியால் செப்டம்பர் 10ஆம் தேதி தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விமானப்படை தள பொறுப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்த பிறகும் அவர் 20ஆம் தேதிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டறிய தன்னை இரு விரல் பரிசோதனைக்கு விமானப்படை மருத்துவர்கள் உட்படுத்தியதாகவும் அந்த பெண் அதிகாரி கூறியிருக்கிறார்.

புகார் தெரிவித்த பெண் அதிகாரியும் ஆண் அதிகாரியும் கோவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி இரவு படையின் மெஸ்ஸில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டதாகவும் பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டதாகவும் பெண் அதிகாரி புகாரில் கூறியுள்ளார். மேலும், அன்றைய தினம் நள்ளிரவைக் கடந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆண் அதிகாரி குடிபோதையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளார்.

தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விமானப்படை குழு தலைவரிடம் கூறியதும், மற்றொரு பெண் அதிகாரியுடன் தன்னை சந்தித்த அவர், “உன் எதிர்காலம், குடும்ப மரியாதை போன்றவற்றை நினைத்துப் பார்,” என்று கூறியதாகவும் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். பின்னர் அந்த இரு உயரதிகாரிகளும் மீண்டும் தன்னை சந்தித்து, ஒன்று எழுத்துபூர்வமாக புகார் தெரிவிக்க வேண்டும் அல்லது கருத்தொற்றுமையுடன் உறவு கொண்டதாக எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து புகார் தெரிவிக்க துணிந்தபோது அன்றைய தினம் மருத்துவமனையில் இரு விரல் பரிசோதனைக்கு தான் உட்படுத்தப்பட்டதாக அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்ததாக தன்னிடம் கூறிய உயரதிகாரி, எழுத்துபூர்வ புகாரை திரும்பப் பெறவேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த தகவல் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விமானப்படைக்கு மட்டுமின்றி உனக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்று தன்னிடம் எச்சரித்ததாக பெண் அதிகாரி தெரிவித்தார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இருந்தபோதும், இந்த விவகாரத்தில் அவர் துணிந்து சென்று நகர காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, “விமானப்படை அதிகாரியை உள்ளூர் காவல்துறை வழக்கு ஒன்றில் கைது செய்திருப்பது தவறு என்றும் அந்த அதிகாரியை தங்களிடம் ஒப்படைத்தால் விமானப்படை சட்டத்தின்படி அவருக்கு எதிரான விசாரணை நடத்தப்படும்,” என்றும் கூறி நீதிமன்றத்தில் இந்திய விமானப்படை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய விமானப்படை தரப்பில் இருந்து இன்னும் கருத்து ஏதும் ஊடகங்களிடம் தெரிவிக்கப்படவில்லை.

2014ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், ‘இரு விரல் பரிசோதனை’ மற்றும் அதன் விளக்கம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை, உடல், மன ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை மீறுவதாக உள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது. ‘இரண்டு விரல் பரிசோதனை’ மற்றும் கன்னித்தன்மை பரிசோதனைகள் மூலம் வன்முறையின்றி உறவு கொண்டார்கள் என்பதை உறுதிபட குறிப்பிட முடியாது என ஆராய்ச்சியாளர்களும் மருத்துவ நிபுணர்களும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். கன்னித்திரை கிழிந்தோ சேர்ந்தோ இருப்பதை மட்டும் வைத்து இதில் முடிவெடுக்க முடியாது. அதற்கும் பாலியல் வன்முறை அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மேற்கோள்காட்டி சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றத்தில் கூட ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இதுபோன்ற இருவிரல் பரிசோதனை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எவ்வித பயனையும் தரப்போவதில்லை. மாறாக அவர் மீதே சந்தேகம் கொள்ளும் பார்வையை தோற்றுவித்து விடும் என்று நீதிமன்றம் கூறியது. ஒரு பெண்ணின் கன்னித்திரை தன்மையை வைத்து அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் பாகிஸ்தான் நீதிமன்றம் கூறியிருந்தது.

உலக சுகாதார அமைப்பும், கடந்த 2018ஆம் ஆண்டு இதே கருத்தை வெளியிட்டுள்ளது. “கன்னித்தன்மை சோதனை பெரும்பாலும் கன்னித்திரை தன்மை அல்லது அது கிழிந்த அளவு, மற்றும்/அல்லது யோனியில் விரல்களைச் சொருகுவதன் மூலம் (“இரண்டு விரல்” சோதனை) பரிசோதிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் ‘பாலியல் செயல்பாட்டு வரலாறை’ இந்த முறையில் அறியலாம் என்பது நம்பிக்கை அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஒரு பெண் யோனி வழியாக உடலுறவு கொண்டாரா இல்லையா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Contact Us