மகளை சரமாரியாக வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த தந்தை தூக்கிட்டு தற்கொலை

 

மகளை சரமாரியாக அரிவாளால் வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சி மாவட்டம் அதவத்தூர் சக்தி நகர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதவத்தூர் சக்திநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த மூர்த்தி(72)யின் முதல் மனைவி பிருந்தா தேவி. இவரது மகன் அருண். முதல் மனைவி பிருந்தாதேவி காலமானதை அடுத்து இரண்டாவதாக லதா என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் மூர்த்தி. அவருக்கு பிரபாகரன் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி லதாவும், மகன் பிரபாகரனும் குடும்ப விழாவில் பங்கேற்பதாக சென்றுவிட்டு இன்று வீடு திரும்பி இருக்கின்றனர். அப்போது மகள் கீர்த்தனா கை, கால், முகம் என்று உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். இதைக்கண்டு கதறிஅழுதவர்களுக்கு அடுத்த பேரிடியாக, கணவர் மூர்த்தி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டு இருந்திருக்கிறார்.

கீர்த்தனாவை தூக்கிப் பார்த்தபோது அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து. இதையடுத்து சோமரசம்பேட்டை போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கீர்த்தனாவை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் கீர்த்தனா, தான் ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் சொல்லியிருக்கிறார். இதில் ஆத்திரப்பட்ட மூர்த்தி, மகளை அரிவாளால் ஆத்திரத்தில் வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்து இருக்கிறார் . மகள் இறந்து விட்டதாக நினைத்து தந்தை மூர்த்தியும் குற்றவுணர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இருந்தாலும் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Contact Us