திண்டுக்கல்லில் இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

 

திண்டுக்கல் மாவட்டம் வட்டப்பாறையை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மர்ம கும்பலால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விபச்சார வழக்கில் கைதாகி வெளியே வந்த ஸ்டீபன்ராஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மன்மதன், கார்த்திகேயன், சங்கரபாண்டி, மருதீஸ்வரர், ராம்குமார், மணிகண்ட ராஜன் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விபச்சார வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற ஸ்டீபன் ராஜ் கொலை வழக்கில் கைதான சரவணன் என்பவருடன் சிறையில் பழகி வந்துள்ளார். சிறையில் இருந்தவர்கள் விடுதலையானதும் திமுக பிரமுகர் இன்பராஜ் என்பவருக்கு சரவணனை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். பிறகு, இவர்கள் மூவரும் இணைந்து பாண்டிச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து தமிழகத்தில் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இன்பராஜனும் சரவணனும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனதால் கூட்டணியிலிருந்து ஸ்டீபன் ராஜை விலக்கியுள்ளனர். மனம் வருந்திய ஸ்டீபன்ராஜ் உங்களை ஒரு வழி பண்ணுகிறேன் என்று சவால் விட்டுள்ளார். இந்த நிலையில் தான், கடந்த 22ஆம் தேதி காலை மாவட்ட கண்காணிப்பாளர் நடத்திய சோதனையில் இன்பராஜன் தோட்டத்து வீட்டில் இருந்து மதுபான பாட்டில்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்று மாலை ஸ்டீபன் ராஜ் வட்டபாறை சாராய கடைக்கு சென்றுள்ளார். அப்போது மன்மதன், கார்த்திகேயன், சங்கரபாண்டி, மருதீஸ்வரர், ராம்குமார், மணிகண்ட ராஜன் ஆகியோர் சேர்ந்து ஸ்டீபன் ராஜன் தலையை துண்டித்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். சாராயக் குடோனை காட்டிக் கொடுத்ததால் ஸ்டீபன் ராஜின் தலையை துண்டித்து கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Contact Us