ஷாருக்கான் மகனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை

 

நேற்றிரவு மும்பை கடல்பரப்பில் உல்லாசக் கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் விருந்து நடத்திய விவகாரத்தில் பிரப பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், உட்பட 8 பேரிடம் விசாரணைகள் நடந்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வாங்கடே தெரிவித்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவாவிற்கு செல்லும் கப்பலில் போதை விருந்து நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர்.

கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விருந்து தொடங்கியுள்ளது. விருந்தில் அனைவரும் பலவிதமான போதைப்பொருட்களை பயன்படுத்தினர்.

போதை விருந்தில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதில், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 13 பேரை பிடித்தனர். இதில் 3 பேர் பெண்கள் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதை விருந்து நடத்தியது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில் அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.

Contact Us