மின் வேலியில் சிக்கி உயிரிழந்த தம்பதி: பன்றி வேட்டையின் அதிர்ச்சி பின்னணி..!

வேலூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை பிடித்து வர சென்ற தம்பதி மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் (34) அஸ்வினி(26) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது. இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு வீடு திரும்பாததால் கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு மாட்டை தேடி சென்றுள்ளனர்.

இவர்கள் இன்று காலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவர் மற்றும் பசுமாடு ஒன்றும் எலுமிச்சை பயிரிடப்பட்டுள்ள விஜயகுமாருக்கு சொந்தமான நிலத்தில் சடலமாக கிடந்துள்ளனர். அதை கண்ட அப்பகுதியினர் திருவலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த திருவலம் காவல் துறையினர் இருவர் உடலை ஆய்வு செய்த போது அவர்கள் உடல் மின்வேலி மூலம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரது உடலை மீட்ட காவல் துறையினர் பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விளைநிலங்களை பாதுகாக்க பன்றிக்கு வைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் நில உரிமையாளர் விஜயகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விஜயகுமார் தனது நிலத்துக்கு வந்து ஒருவாரம் ஆனது தெரியவந்தது. மேற்படி நடந்த விசாரணையில், புதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவர் பன்றியை வேட்டையாடுவதற்காக விஜயகுமார் நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இருந்ததில் இருந்து மின்சாரத்தை திருடி மின்வேலி அமைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.

மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டை பிடித்து வரச் சென்ற கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us