`பாலியல் அத்துமீறல்,ஆபாச வீடியோக்கள்!’- பள்ளிச் சிறுமி புகார்; ஜிம் ட்ரெயினர் கைது!

 

அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் அதே பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார். அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் ஆனந்தனின் மகன் அரவிந்தன் (21) என்பவர் ஜிம் ட்ரெயினர் இருந்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த இளைஞர் ஒருவருக்கு அரவிந்தன் பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியிருக்கின்றனர். அதனால், அந்த இளைஞர் அரவிந்தனைத் தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த இளைஞரின் 10-ம் வகுப்பு படிக்கும் தங்கைக்கும், ஜிம் ட்ரெயினர் அரவிந்தனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரவிந்தன், சிறுமியைக் காதலிப்பது போல் நடித்துக் கடந்த 6 மாதங்களாக அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவரை வெளியில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அப்படி ஒவ்வொரு முறை வெளியில் அழைத்துச் சென்று அத்துமீறும் போதும், அரவிந்தன் அதைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்தன் மீது சந்தேகமடைந்த சிறுமி எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்க, ஆத்திரமடைந்த அரவிந்தன் “அப்படி தான் எடுப்பேன்.உன்னுடைய வீடியோக்கள் என்னிடத்தில் ஏராளமாக இருக்கின்றன. வெளியில் யாரிடமாவது கூறினால் இணையத்தில் வெளியிட்டு விடுவேன்!” என்று மிரட்டியிருக்கிறார். அதனால், செய்வதறியாது கடந்த சில தினங்களாக மன உளைச்சலிலிருந்து வந்த சிறுமி, நேற்று முன்தினம் திடீரென தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரைப் பத்திரமாக மீட்டு, தற்கொலைக்கான காரணத்தைப் பொறுமையாக விசாரித்திருக்கின்றனர்.

அப்போது, சிறுமி அரவிந்தனின் பாலியல் அத்துமீறல் அராஜகங்களைப் போட்டுடைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் உடற்பயிற்சியாளர் அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மகளிர் போலீஸார், இளைஞர் அரவிந்தனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Contact Us