தாயின் கள்ளக்காதலை கண்டித்ததால் சிறுவனுக்கு நேர்ந்த கதி

தாயின் கள்ளக்காதலை கண்டித்ததால் சிறுவனுக்கு ஏற்பட்ட கதி கர்நாடக மாநிலம் ஹலசூரு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கீதாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் கருத்து வேறுபாடு காரணமாக ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வர கீதாவுக்கு அதே பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் அறிமுகமாகியிருக்கிறார். கணவனைப் பிரிந்து இருந்ததால் கீதாவுக்கும் ஆட்டோ டிரைவர் சக்திவேலுக்கும் கள்ளத்தொடர்பு உருவாகியிருக்கிறது. இதனால் சக்திவேல் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.

இதைப்பற்றி கீதாவின் 17 வயது மகன் நந்துவிடம் அக்கம்பக்கத்தினரும் நந்துவின் நண்பர்களும் ஒருமாதிரியாக சொல்ல, சிறுவன் நந்துவிற்கு அவமானமாக இருந்திருக்கிறது. இதனால் வீட்டிற்கு வந்து தாயிடம் சண்டை போட்டிருக்கிறார். இனிமேல் சக்திவேல் நம் வீட்டிற்கு வரக்கூடாது என்று சத்தம் போட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி இரவு கீதா வீட்டிற்கு மீண்டும் சக்திவேல் வந்திருக்கிறார். அப்போது சிறுவன் இனிமேல் இங்கே வரக்கூடாது என்று சொல்லி சத்தம் போட்டிருக்கிறார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி சிறுவனும் ஆட்டோ டிரைவர் சக்திவேலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுவனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த மகன் நந்துவை அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார் கீதா. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

ஹலசூரு போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, தாய் கீதாவிடம் விசாரணை நடத்தினர். கொலையில் கீதாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்தனர். சம்பவம் நடந்தபோது மகனை எதுவும் செய்து விட வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி சக்திவேலை தடுத்து பார்த்தேன். அவர் தான் ஆத்திரத்தில் என்னையும் கீழே தள்ளிவிட்டு மகனை கத்தியால் குத்தி விட்டார் என்று சொல்லியிருக்கிறார்.

இதை அடுத்து ஆட்டோ டிரைவரை சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியபோது கீதாவின் வீட்டிற்கு இனி வரக்கூடாது என்று அவர் மகன் என்னை தடுத்தான். ரொம்ப பிடிவாதமாக இருந்து சத்தம் போட்டான். இதனால் சண்டை வந்தது. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொன்று விட்டேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Contact Us