கேரம்போர்டு விளையாடலாம் என்று சிறுமியை அழைத்து சென்ற இளைஞர் சிறையிலடைப்பு

 

சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்ததோடு அல்லாமல் வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதால் அந்த சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து வன்கொடுமைசெய்ததில் 2 மாத கர்ப்பம் ஆகி வாந்தி எடுக்க, சாப்பாடு சரியில்லாமல் வாந்தி எடுக்கிறார் என்று நினைத்த பெற்றோரை அதிரவைத்தது அந்த செய்தி. இதையடுத்து போலீசாரால் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார் அந்த இளைஞர்.

விழுப்புரம் மாவட்டம் கம்பளாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நிறுவனத்தில் விடுமுறை விட்டதும் சொந்த கிராமத்திற்கு செல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே உறவினர் மகளான 14 வயது சிறுமிக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சிறுமியின் பெற்றோர் வெளியே சென்ற நேரம் பார்த்து விக்னேஷ் வழக்கம்போல் சிறுமியிடம் கேரம்போர்டு விளையாடலாம் என்று கூறியிருக்கிறார்.

விளையாடுவதற்காக சிறுமியை தனியாக அழைத்து சென்றிருக்கிறார். சிறுமியும் அவரை நம்பி தனியாக சென்றபோது வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்திருக்கிறார். அப்போது சிறுமி அழுது கெஞ்சி இருக்கிறார். அதையும் மீறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

சிறுமியும் பயந்துகொண்டு நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார் . இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் சிறுமியிடம் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமி திடீரென்று வாந்தி எடுத்திருக்கிறார். சாப்பாடு சரியில்லாமல் வாந்தி எடுக்கிறார் என்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

சிறுமியின் பெற்றோருக்கு ஒரே அதிர்ச்சி. மருத்துவமனை நிர்வாகம் அதற்குள் சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் சொல்ல, உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளிக்க, அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி விக்னேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் சிறையில் அடைத்துள்ளார்கள்.

Contact Us