மாமனார் செய்த காரியம் : கணவன் – மனைவி பரிதாப பலி

 

ஆத்திரத்தில் மனைவியை சுத்தியலால் அடித்ததால் சுருண்டு விழுந்து அதே இடத்திலேயே உயிரிழந்து விட்டதால் மனைவியின் கொலைக்கு தான் காரணம் ஆகிவிட்டோமே என்கிற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆகாரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாரியார் நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

வாரியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மூர்த்தி(47). இவரது மனைவி கலைச்செல்வி(41). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூன்று பிள்ளைகளும் அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாய வேலை செய்து வந்த அந்த குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார் மூர்த்தி.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மூர்த்தியின் மாமனாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதால், மகள் கலைச்செல்வியிடம் சொல்லி அழுதிருக்கிறார். உடனே அவர் தன் கணவர் மூர்த்தியிடம் பேசி தங்கள் வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதை அடமானம் வைத்து கடனாக பணத்தை வாங்கி அப்போது தனது நிலையை நிலைமையை சமாளித்திருக்கிறார் மூர்த்தியின் மாமனார் ஏழுமலை.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்த பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் இருந்திருக்கிறார் ஏழுமலை. இதனால் மூர்த்திக்கும் கலைச்செல்விக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இன்றைக்கும் அப்படித்தான் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. ஏழுமலை கடனை அடைத்துவிட்டு பத்திரத்தை மீட்க கொடுக்காததால் அவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்து இருக்கிறது.

அப்போது ஆத்திரத்தில் மூர்த்தி, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து கலைச்செல்வியை வேகமாக தாக்கியிருக்கிறார். இதில் அவர் சுருண்டு விழுந்திருக்கிறார். பேச்சு மூச்சு இல்லாமல் அவர் கிடக்கவும், அருகே சென்று தூக்கி பார்த்திருக்கிறார். அப்போதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதை பார்த்துக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளும் கதறியிருக்கிறார்கள்.

ஆத்திரத்தில் நாம் செய்த செயல் மனைவியின் உயிரையே பறித்து விட்டது என்று மனவேதனைக்கு ஆளாகி இருக்கிறார் மூர்த்தி. குழந்தைகள் மூன்று பேரும் தாயைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கும் போது, வேகவேகமாக மூர்த்தி வயல் வெளியை நோக்கி நடந்திருக்கிறார். அங்கு சென்றவர் வயல்வெளியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்து ஆரணி போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்வதற்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

மனைவியை கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டு விட்டதால் மூன்று பிள்ளைகளும் பரிதவித்து நிற்கிறார்கள்.

Contact Us