நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்

குழந்தை பெற்றெடுத்ததும் தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. விமானம் கருங்கடலை கடந்து வந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த, கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. நல்லவேளையாக அந்த விமானத்தில் மருத்துவக் குழுவினர் பயணித்தனர். அவர்கள் உடனடியாக கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தனர். விமான ஊழியர்களும் உதவி செய்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் தாயையும், குழந்தையையும் பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். விரைவில் அவர்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஏர் இந்தியா அதிகாரி கூறி உள்ளார்.

Contact Us