ரூ.500 காணாமல் போனதால் ஆத்திரம்… மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்!

 

தூத்துக்குடி அருகே 500 ரூபாய் காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்தவர் சுடலை (69). கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள்(66). இவர்களுக்கு 3 மகள்கள் உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், சுடலை, மனைவி முத்தம்மாளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை சுடலை வைத்திருந்த ரூ.500 பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கேட்டபோது மனைவி முத்தம்மாள் தான் எடுக்கவில்லை என மறுத்துள்ளார்.

ஆனால், முத்தம்மாள் தான் தனது பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றுவதாக கூறி, சுடலை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சுடலை ஆத்திரத்தில் அரிவாளால் முத்தம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்றபோது, சுடலை அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார், மூதாட்டி முத்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணவர் சுடலையை தீவிரமாக தேடி வருகின்றனர்.பணம் காணாமல் போன தகராறில் மனைவி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் குலசேகரன்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us