கள்ளக்காதலியால் ஏற்பட்ட தகராறு; நண்பனைக் கொன்று விபத்து போல சித்தரித்த நண்பர்கள் கைது!

 

கடலூர் அருகே கள்ளக்காதலியுடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்து விபத்து போல் சித்தரித்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் நபீஸ். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான மனோஜ் பிரேம்குமார் கலைச்செல்வன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அருண் என்பவரை போன் செய்து மது அருந்த அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த அருணுக்கும் பிரேம் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியை எடுத்து வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பிற நண்பர்கள் விபத்து போல் சித்தரிக்க, அருணை சாலையில் போட்டு விட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அருண் குமாரின் கைபேசி போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஐயம்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் அவ்வப்போது வீட்டிற்கு வந்து தனது நண்பர்களை சென்று சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அருணும் பிரேம்குமாரும் மெரினா கடற்கரையில் சாவி அச்சிடும் வேலை செய்து வந்த நிலையில், அங்கு மீன் விற்கும் ஒரு பெண்ணுடன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணுடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அருணை வரவைத்து பிரேம் குமார் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், கொலை செய்ததை மறைப்பதற்காக விபத்து நிகழ்ந்தது போல் சித்தரிக்க திட்டமிட்டு சாலையின் நடுவே அருணை போட்டுவிட்டு தப்பி ஓடியதும் அம்பலமானது. இதையடுத்து பிரேம்குமார், மனோஜ், கலைச்செல்வன் மற்றும் நபீஸ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us