கனேடிய பொலிசாரிடம் வசமாக சிக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்கள் மூவர்

 

ப்ராம்ப்டனில் ஆயுதம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதுடன் நான்காவது சந்தேக நபரைத் தேடி வருவதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது வாகனத்தில் சென்ற குழு ஒன்றை இன்னொரு வாகனத்தில் நால்வர் கும்பல் ஒன்று துரத்தியதுடன, அவர்கள் வாகனத்துடன் மோதியுள்ளது.

அத்துடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளது. ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த அவர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து சென்ற அந்த கொள்ளை கும்பலிடம் வாகனம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் விட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கைவிடப்பட்ட நிலையில் இரு வாகனங்களையும் மீட்டுள்ளனர். மட்டுமின்றி, சாரதிகளாக செயல்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.

மூன்றாவது நபரை ப்ராம்டன் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைதான இந்திய வம்சாவளியை சேர்ந்த 29 வயது Simranjeet Narang, 36 வயது Davinder Mann, மற்றும் 27 வயது Aadish Sharma ஆகியோர் மீது கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்காவது நபரை தேடி வருவதாகவும், சட்டத்தரணி ஒருவரை தொடர்பு கொண்டு, உடனடியாக பொலிசாரிடம் சரணடைய வேண்டும் என அந்த நபருக்கு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கொள்ளை போன பொருட்களை இதுவரை மீட்க முடியவில்லை எனவும், அது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Contact Us