இலங்கைக்குள் நுழைந்த சீனா: கலக்கத்தில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்

 

இலங்கையில் சீன அரசாங்கத்தின் பாரிய அளவிலான நீண்ட கால முதலீடுகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் கடும் கவலையடைந்துள்ளனர் என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மத்திய முகவரமைப்பொன்று சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் மாநாடு பற்றி குறிப்பிட்டுள்ளதெனவும் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் விடயத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இலங்கை மீதான செல்வாக்கை கூட அது இழந்துவிட்டதாகவும் பிரதிநிதிகள் கருதுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சீனர்கள் வட இலங்கையில் தங்கள் இருப்பை நிலைநாட்டினால் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி ஆபத்தில் இருக்கும் என்றும் இக்கூட்டதில் உறுதியாக நம்பப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மை இலங்கையில் சீனாவின் முக்கியத்துவத்தைப் பெற வழி வகுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டதுடன், இலங்கை தமிழருக்கான அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளமொன்றை உருவாக்க சீன அரசாங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதென மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வட இலங்கையில் தொந்தரவு இல்லாமல் பிரசன்னமாகியிருப்பதற்கு அவர்களுக்கு உதவுமென்பதுடன் மறுபுறத்தில், இந்தியாவுக்கு எதிரான அவர்களின் நிலைப்பாட்டை இலகுவாக்கு வதற்குமாக இது போன்ற முயற்சிகளை சீனர்கள் வரவேற்பார்கள் என்று அவர்கள் அனுமானிக்கின்றனர், என்று பாதுகாப்புத் தயார்நிலை குறித்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தங்கள் முயற்சிகளுக்கு சாதகமான அபிப்பிராயத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக சீன புத்திஜீவிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள புலம்பெயர்ந்த இலங்கைதமிழர்கள் தமது உலகளாவிய வளங்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மாநாட்டில் இந்த மூலோபாயத்தை கடுமையாக எதிர்ப்பவர்களும் இருந்துள்ளனர் இந்தியத் தமிழர்களின் ஆதரவை இலங்கைத் தமிழர்கள் இதனால் இழக்க நேரிடுமென்று அவர்கள் கருதுகின்றனர்.

Contact Us