2 டோஸ் தடுப்பூசி போட்டும் பலனில்லை – பிரபல நடிகையை 2-வது முறையாக தாக்கிய கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை, கடந்த 10 நாட்களில் தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தமிழில் ’விரட்டு’ என்ற படத்தில் நடித்திருக்கும் இவர், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது அகண்டா என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்ட நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி,  தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அவர் அறிவுறுத்தி உள்ளார்

Contact Us