சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை; நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 

சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான்(32). இவர் மீது கே.கே நகர், ஆதம்பாக்கம், குன்றத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. கூலிப்படைகளுக்காக இவர் கொலை செய்ததாக அந்த வழக்குகள் பதிவாகியுள்ளது. அம்பேத்கர் நகரில் நாகூர் மீரானுக்கு பல எதிரிகள் இருந்துள்ளனர். இதனால், அம்பேத்கர் நகரில் வெளியேறிய நாகூர் மீரான் வெள்ளக்கல் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். அண்மையில், காங்கிரஸ் கட்சியிலும் இணைந்திருக்கிறார். அவருக்கு இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு நாகூர் மீரான் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அம்பேத்கர் நகருக்கு வந்துள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தலை, முகம், கை, கால் என பல இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த நாகூர் மீரான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us