50 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன்

 

50 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பதினைந்து வயது சிறுவனை கைது செய்துள்ளனர் போலீசார். இந்த அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அரங்கேறியிருக்கிறது .

திருக்கழுக்குன்றத்தில் சேர்ந்த ராமுவுக்கு 50 வயதில் மனைவியும், 15 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கணவன்- மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தங்கள் பிள்ளைகளை காப்பாற்றி வந்திருக்கின்றனர்.

ஏழ்மையின் காரணமாக இவர்கள் குடிசையில்தான் வசித்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் வீட்டின் அருகே மலை போன்ற சிறு குன்று பகுதி ஒன்று உள்ளது. கணவன், மனைவி, இரு குழந்தைகள் எல்லோரும் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் 4 மணி அளவில் குன்றுப் பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. ராமுவின் மகன் எழுந்து போய் கதவை திறந்து நாய் குரைக்கும் இடத்திற்குச் சென்று பார்த்திருக்கிறார்.

அங்கேயே தனது தாய் அரைகுறை ஆடைகளுடன் கிடந்திருக்கிறார். தாயின் அருகே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ராமு மகனைப் பார்த்ததும், அந்த சிறுவன் தப்பி ஓடியிருக்கிறான்.

இதையடுத்து ராமு மகன் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள். அவர்கள் ராமுவின் மனைவியை தூக்கிப் பார்த்த போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறார். பின்னர்தான் அவர் உயிரிழந்துவிட்டார் என்று அறிந்து பதட்டம் அடைந்திருக்கிறார்கள். இதற்குள் கணவன் மற்றும் உறவினர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

அப்போது அவர்களிடம் ஒரு பதினைந்து வயது சிறுவன் தான் உட்கார்ந்து இருந்தான் என்று சொல்ல தப்பியோடிய அவனை பிடிப்பதற்காக பல இடங்களிலும் தேடி இருக்கிறார்கள். இதற்குள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் . சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வந்தார். தப்பியோடிய அந்த சிறுவன் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த சிறுவன் மானாபதியில் உள்ள காயலான் கடையில் வேலை செய்யும் சிறுவன் என்பது தெரியவந்திருக்கிறது. ராமுவின் தாய் இயற்கை உபாதைக்காக அதிகாலையில் அந்தப்பக்கம் சென்றபோது அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் அந்த சிறுவன். அப்போது அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அச்சிறுவன் கடுமையாகத் தாக்கியிருக்கிறான். இதில் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவான அந்த சிறுவனை பிடித்துவிட்டனர் போலீசார். அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைந்துள்ளனர்.

50 வயது பெண்ணை 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us