ஒருதலை காதல்…காதலியின் கணவன் தலையை வெட்டி வீசிய இளைஞர்!

தான் ஒருதலையாய் காதலித்த பெண்ணை, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த இளைஞர், அந்த வாலிபரின் தலையை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஒரு தலைக்காதல் காரணமாக, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த டிவி மெக்னிக் சூரிய ராகவன் என்பவரை தலை துண்டித்து படுகொலை செய்த வழக்கில் சோழபுரத்தினை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்|ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன் (31). இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென கடைக்கு வந்த மர்ம நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் தான் கொண்டு வந்த கத்தியால் சூரிய ராகவன் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று சூரிய ராகவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர்.

விசாரணையில் சூரிய ராகவனை கொலை செய்துவிட்டு தப்பியோடியது சோழபுரத்தினை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ஆனந்தராஜ்(22) என்பது தெரியவந்தது.

படுகொலை செய்யப்பட்ட சூரிய ராகவனுக்கும், படர்ந்தபுளி கிராமத்தினை சேர்|ந்த மகாலெட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரியான மகாலெட்சுமி, சூரிய ராகவன் கடையின் அருகேயுள்ள டைப்பிஸ்ட் இன்ஸ்டியூட்டிற்கு வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இந்த காதல் விவாகரம் இரு வீட்டருக்கும் தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில் பெற்றோர்களின் எதிர்ப்பினையும் மீறி சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்

சூரிய ராகவனை கொலை செய்த சோழபுரத்தினை சேர்ந்த ஆனந்தராஜ் கேட்டரிங் முடித்து விட்டு, விழாக்களுக்கு சமையல் செய்வது, கோவில் திருவிழாக்களில் ஆடு வெட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

சூரிய ராகவன், மகாலெட்சுமியை காதலிக்கும்போது, ஆனந்தராஜும் அவரை காதலித்துள்ளார். ஆனால் மகாலெட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துவிட்டார். ஒரு சமூகத்தினை சேர்ந்த தன்னை காதலிக்காமல் மற்றொரு சமூகத்தினை சேர்ந்த சூரிய ராகவனை காதலித்து வந்தால், ஆனந்த்ராஜ், மகாலெட்சுமி மற்றும் சூரிய ராகவன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் சூரிய ராகவன் மற்றும் மகாலெட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டது ஆனந்தராஜுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த சூரிய ராகவனை கொலை செய்ய வேண்டும் என்று ஆனந்தராஜ் திட்டம் திட்டியுள்ளார்.

அதன்படி பழுதான எல்.இ.டி டிவி ஒன்றை பழுது பார்க்க, சூரிய ராகவன் வேலை பார்த்த கடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனந்த்ராஜ் கொடுத்துள்ளார். மேலும் தினமும் டிவி வேலை பார்த்தாச்சா என்று சூரிய ராகவனிடம், போனில் ஆனந்த்ராஜ் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் கேட்டபோது டிவி ரெடியாகிவிட்டது வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சூரிய ராகவன் தெரிவித்துள்ளார்.

இதையெடுத்து தான் திட்டமிட்டபடி ஆனந்தராஜ் ஒரு கட்டை பையில் தான் ஆடு வெட்ட கொண்டு செல்லும் கத்தி, மிளாகாய் பொடி ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார். டிவி வாங்குவதற்கு முன்பு, தான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்தாய் என்று கூறி ஆனந்தராஜ், சூரிய ராகவனிடம் வாக்கு வாதத்தில் செய்துள்ளார்.

வாக்கு வாதம் முற்றவே தான் கொண்டு வந்த மிளாகாய் பொடியை சூரிய ராகவன் முகத்தில் வீசி விட்டு கத்தியை கொண்டு தலையை துண்டித்த ஆனந்த்ராஜ், தலையை மட்டும் கையில் பிடித்தவாறு, அக்கம்பக்கம் சுற்றி பார்த்து விட்டு அருகில் வீசி விட்டு தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எட்டயுபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆனந்த்ராஜை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு ஒரு தலைக்காதல் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us