ரூ.500 அனுப்பினால் அரை மணி நேரத்தில் “கொரோனா நெகட்டிவ்” சான்றிதழ் – சிறை பறவையாகிய தங்க கடத்தல் “குருவி”

 

உலகில் எந்த பேரழிவு வந்தாலும் அதை வைத்து மோசடி வியாபாரம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் தற்போதைய டிரெண்ட் கொரோனா தான். கொரோனாவை வைத்து பல்வேறு தீய வழிகளில் லாபமீட்ட நினைக்கிறார்கள் பலர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை போலியாக தயாரிப்பது, போலி சானிடைசர் என அனைத்திலும் போலியை புகுத்துகிறார்கள் போலிகள். அந்த வகையில் விமான நிலையங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன கொரோனா நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து வழங்கிய “குருவி” ஒருவர் சிக்கியிருக்கிறார்.

குருவி என்றால் யார் என பெரிய விளக்கம் தேவைப்படாது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்திவருபவர்கள் தான் குருவிகள். இந்த குருவி கூட்டத்தைச் சேர்ந்தவர் தான் திருவல்லிக்கேணியை சேர்ந்த இன்பர்கான் (29). இவர் பரிசோதனையே செய்யாமல் ரூ.500 போன்பே, கூகுள்பேயில் அனுப்பினால் அடுத்த அரை மணி நேரத்தில் போலியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து வழங்கி வந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்ததால் வியாபாரம் படுஜோராக வாட்ஸ்அப்பில் பரவியிருக்கிறது. அப்படி தான் மண்ணடி தம்புச்செட்டி தெருவில் கொரோனா பரிசோதனை மையம் நடத்திவரும் ஹரிஸ் பர்வேஸூக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இதன் உண்மைத்தன்மையை அறிவதற்காக அவர்கள் சொன்னபடியே ரூ.500 அனுப்பியிருக்கிறார். அரை மணி நேரத்தில் சான்றிதழை அவர் பெயர், முகவரியுடன் இன்பர்கான் அனுப்பியிருக்கிறார். உடனே வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் பர்வேஸ் புகார் செய்ய, இன்பர்கானை கைதுசெய்துள்ளனர் போலீஸார். விசாரணையில் இன்பர்கானுடன் அவரது நண்பரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான இன்பர்கானை புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நண்பரைத் தேடி வருகிறார்கள்.

Contact Us