மதர் சென்டிமென்ட்டில் மூதாட்டிகளை லாக் செய்து பெண்களுடன் உல்லாசம்… கில்லாடி வாலிபர் கைது!

அம்மா சென்டிமென்ட்டில் மூதாட்டிகளை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை அபேஸ் செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்த கில்லாடி வாலிபர் போலீசிடம் சிக்கினார்.

சென்னை பழைய பல்லாவரம், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (71). பல்லாவரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 23 ஆம் தேதி தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் சரோஜாவை பார்த்து, நீங்கள் எனது தாய் போல இருப்பதாக கூறி பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது தான் சமூக சேவைகள் செய்து வருவதாகவும், பலருக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த நபர் வார்த்தை ஜாலத்தில் மயங்கி மூதாட்டி தமக்கு முதியோர் உதவித்தொகை வேண்டுமென கோரி, அவருடன் தாம்பரம் தபால் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அங்கு சரோஜாவிடம் நீங்கள் கழுத்தில் நகைகளை அணிந்திருந்தால் முதியோர் உதவிதொகை தரமாட்டார்கள் என்று கூறி நகைகளை கழற்றி தன்னிடம் கொடுங்கள்; நான் பிறகு தருகிறேன் என்று அந்த நபர் கூறியுள்ளார்.

அவரது வார்த்தையை நம்பி உடனே மூதாட்டி நகைகளை கழற்றி கொடுத்துள்ளார். அதன் பிறகு தபால் நிலையத்துக்கு உள்ளே மூதாட்டியை அழைத்துச் சென்று அமரவைத்துவிட்டு அந்த மர்ம நபர் 4 சவரன் நகைகளுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, தன்னிடம் நூதனமாக நகை திருடிய நபர் குறித்து தாம்பரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான் இதுபோன்று பல புகார்கள் வந்துள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து தாம்பரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து ஆராய்ந்தபோது, மூதாட்டிகளை சென்டிமென்ட்டாக கவிழ்த்து அவர்களிடம் நகைகளை அபேஸ் செய்துவரும் நபர் மதுரையை சேர்ந்த சித்திரவேல் (39) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

உடனே அவரது செல்ஃபோன் சிக்னலை வைத்து தாம்பரம் பகுதியில் ஒளிந்திருந்த சித்திரவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இதுவரை 400 மேற்பட்ட மூதாட்டிகளை ஏமாற்றி நகைகளை அவர் அபேஸ் செய்துள்ளதும், திருட்டு நகைகளை விற்று கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் சித்தரவேல் மீது மதுரை, கோவை, திண்டிவனம், தேவக்கோட்டை, பெரம்பலூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அவரிடமிருந்து 6 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போவீசார், நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைத்தனர்.

Contact Us