கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற மனைவி

 

தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டு வந்த கணவனை, பொறுத்தது போதும் என்று ஆத்திரம் தீர கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார் மனைவி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(45). பேருந்து ஓட்டுநரான இவரது மனைவி ரேவதி(36). இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும், 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

நேற்று இரவும் வழக்கம் போலவே குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டிருக்கிறார். தினமும் இப்படி நடந்து வருவதால் பொறுமையிழந்த ரேவதி, வீட்டில் பிள்ளைகள் விளையாட வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து தலையில் ஆத்திரம் தீர சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாராம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். ராஜாராம் உயிரிழந்த தகவல் அறிந்து போலீசார் வந்து உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, ரேவதியை கைது செய்து சென்றனர்.

போலீஸ் விசாரணையில் கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரேவதி.

Contact Us