நடுரோட்டில் பீர் குடித்துக் கொண்டே பெண்களிடம் வழிப்பறி: மக்களை காத்த கூலித் தொழிலாளிகள்!

திருப்பூர் மாவட்டத்தில் விழா காலத்தை பயன்படுத்தி பகல் நேரத்திலே வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் கூலித் தொழிலாளிகள் சரியான சமயத்தில் மக்களை காப்பாற்றி போலீசாரை வரவழைத்தனர்.

மது போதையில் சாலையில் சென்ற பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கத்தி மற்றும் மது பாட்டில் கொண்டு மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்களை பொதுமக்கள் கட்டி வைத்து அடி வெளுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் அரிசி கடை வீதியில் ஏராளமான அத்தியாவசிய வர்த்தக கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அரிசி கடை வீதி சாலைகளில் அமர்ந்து மது அருந்தும் சிலர் அவ் வழியே செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கத்தி மற்றும் மது பாட்டிலை கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதை கண்ட அப்பகுதி சுமைப்பணி தொழிலாளர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மது போதையில் இருந்த நபர்களை கை கால்களை கட்டி வைத்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதை அடுத்து அங்கு வந்த போலீசார் மது போதையில் ரகளை செய்து வந்தவர்களை அப்படியே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அரிசி கடை வீதியில் இதுபோல் சம்பவம் தொடர்ந்து பகலிலேயே நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனினும் இதுத் தொடர்பான தகவல் எதுவும் போலீசார் காதில் கேட்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து பொது மக்களுக்கு இடையூராக இருக்கும் இந்த போதை திருட்டு ஆசாமிகளை ஒடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Contact Us