நடிகை அளித்த பாலியல் புகார்: மணிகண்டன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி தேவா பாலியல் புகாரை அளித்துள்ளார். ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கர்ப்பத்தை 3 முறை கலைத்ததாகவும், குற்றம் சாட்டியுள்ள சாந்தினி தேவா, இறுதியில் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதுடன், அடியாட்களை வைத்து தன்னை மணிகண்டன் தாக்கியதாகவும் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டனை பெங்களூருவில் கைது செய்தனர். அவர் மீது கட்டாய கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை 11ஆவது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிகண்டன் நடிகைக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் மற்றும் வீடியோக்களையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய இரண்டு முக்கியமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நடிகை உள்பட சிலர் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலமும் அளித்திருந்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தாலேயே நடிகைக்கு கருகலைப்பு செய்ததாக கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோல், தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடிகையுடன் மணிகண்டன் தங்குயிருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகினது.

இந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுள்ளதால், விரைவில் மணிகண்டன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

Contact Us