ஆரியன் கானை விடுவிக்க 25 கோடி பேரம்- நீதிமன்றமே அதிரும் பெரும் ரகளை தற்போது …

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை சமீபத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மும்பை-கோவா சொகுசு கப்பலில் ஆர்யன் கானுடன் இருந்தவர்களிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஆர்தா்ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டும் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் அனைவருக்கும் தெரியும் ஆரியன் கான் பெரும் செல்வந்தரின் பிள்ளை என்று. அவர் ஏன் போதைப் பொருளை கடத்தப் போகிறார் ? அல்லது தொடர்புகளை பேணப் போகிறார். ஆனால் அவர் சில வேளை போதைப் பொருட்களை பாவித்து இருக்கலாம்… இன் நிலையில்…

வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் பொது சாட்சியாக இருக்கும் பிரபாகர் சாயில் என்பவர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுடன் செல்பி புகைப்படத்தில் காணப்படும் கோசாவியின் மெய்க்காவலர்தான் பிரபாகர் சாயில் ஆவார். கோசாவி தலைமறைவாக உள்ளார். கப்பலில் சோதனை நடந்த இரவில் இருவரும் அங்கே இருந்து உள்ளனர். பின்னர் கோசாவி, டிசோசா என்பவரை சந்தித்து பேசினார் என பிரபாகர் சாயில் கூறியிருக்கிறார்.

அப்போது ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ஷாருக்கான் தரப்பிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்ததாகவும், டிசோசாவிடம் கோசாவி கூறியதை தான் கேட்டதாக பிரபாகர் சாயில் கூறியிருக்கிறார். இதில் 8 கோடி ரூபாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்படும் என கோசாவி கூறியதாகவும் சாயில் கூறியுள்ளார். கப்பலில் சமீர் வான்கடே தலைமையிலான குழுவினர்தான் சோதனையை நடத்தியிருந்தனர். தற்போது சாட்சிகளில் ஒருவர் தரப்பில் முன்வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மறுத்து உள்ளனர். சமீர் வான்கடே தரப்பில் கடுமையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் மீது சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்குமாறு மும்பை கமிஷ்னருக்கு சமீர் வான்கடே கடிதம் எழுதியிருக்கிறார். பேரம் விவகாரம், ஷாருக்கான் மகன் வழக்கில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது.

Contact Us