மனைவி- தந்தை நடத்தை மீது சந்தேகம்! தந்தையை கொலை செய்த மகன்

 

 

பெரம்பலூர் மாவட்டம் , டி.களத்தூர் அருகே எலந்தலப்பட்டி கிராமத்தைச் சேர்த்தவர் முருகன் (50). இவருக்கு தையல்நாயகி மற்றும் ராணி என்கிற இரண்டு மனைவிகள் உள்ளனர். தையல்நாயகி சிறுவாச்சூர் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். மேற்படி தையல்நாயகிக்கு வேலவன் ( 21 ), வெற்றிவேல் (19) ஆகிய இரண்டு மகன்களும் , இரண்டாவது மனைவியான ராணிக்கு கதிர் என்கிற 14 வயது மகனும் உள்ளனர் .

இந்நிலையில் முதல் மனைவியின் மகன் வேலவனுக்கு மீனா (18) என்ற பெண்ணுடன் திருமணமாகி தந்தை முருகனுடன் எலந்தலப்பட்டி கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில வேலவன் தனது மனைவி மீனாவையும் தனது தந்தையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து, அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தை மீது கோபமடைந்து நேற்று அவரை அடித்துள்ளார்.

இதைபார்த்த முருகன் மகன் வேலவனை திட்டி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வேலவன் தனது தந்தை முருகனை வீட்டின் வெளியே வைத்து சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார். இதில் முருகனின் கழுத்து , கை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . தகவல் அறிந்த பாடாலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் சென்று கொலையுண்ட முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவைத்தனர். மேலும் கொலையாளி வேலவனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Contact Us