குழந்தைக்காக பாலியல் தொழிலாளிகள் நரபலி – பாலிவுட் பாணியில் அரங்கேறிய திடுக் சம்பவம்; தம்பதி கைது!

 

உலக நாடுகள் விஞ்ஞானத்தின் கரம் பற்றி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவை மூட நம்பிக்கைகள் பீடித்து கொண்டு, 2,000 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. போலி சாமியார்களை நம்பி உயிரை விடுவதும் நரபலி கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சினிமாவில் காண்பிப்பது போல் சக்தி கிடைக்கும், புதையல் கிடைக்கும் என நினைத்து சொந்த மகன், மகளை நரபலி கொடுக்கும் அவலமும் அரங்கேறுகின்றன. தற்போது குழந்தை இல்லாத காரணத்துக்காக இரு பெண்கள் நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்தவர்கள் பண்டு பத்தோரியாவும் – மம்தாவும். இவர்கள் இருவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் இவர்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை. பல கோயில்கள் ஏறி இறங்கியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அதேபோல மருத்துவ சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை. இச்சூழலில் கிர்வார் யாதவ் என்ற சாமியாரை சந்தித்த தம்பதி சந்தித்திருக்கிறார்கள். அவர் யாரையாவது நரபலி கொடுத்தால்தான் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார்.

இதை மம்தா தனது சகோதரி மீராவிடம் கூற, அவர் தனது காதலன் நீரஜ்ஜிடம் சொல்லியுள்ளார். பாலிவுட் பட பாணியில் பாலியல் தொழிலாளி ஒருவரை நரபலி கொடுத்தால் யாரும் காணவில்லை என புகார் கொடுக்க மாட்டார்கள் எனக்கூறி நீரஜ் ஐடியா கொடுத்துள்ளார். அந்தப் பட காட்சியைக் காண்பித்து அதுபோலவே செயலிலும் இறங்கியிருக்கிறார்கள். அதன்படி அக்டோபர் 13ஆம் தேதி சராய் சோழா பகுதியில் பாலியல் தொழிலாளி ஒருவரை சாதாரணமாக அழைத்து, பின்னர் அவரை நரபலி செய்துள்ளனர். ஆனால் இந்த பூஜை சிறப்பாக நடைபெறவில்லை எனக்கூறி, இன்னொருவரை நரபலி கொடுக்க வேண்டும் என அந்த சாமியார் சொல்லியுள்ளார்.

இதையடுத்து அதே பாணியில் 20ஆம் தேதி இன்னொரு பாலியல் தொழிலாளியை நரபலி கொடுத்துள்ளனர். உடலை மறைப்பதில் தான் வசமாக சிக்கி கொண்டனர். இரண்டாவது பெண்ணின் உடல் குவாலியர் கல்லூரி வளாகம் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவருடைய உடலை புதைக்க செல்லும்போது கல்லூரி வளாகம் முன் உடல் விழுந்துள்ளது. அப்போதுதான் இவர்கள் முகம், பைக் நம்பர் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த இருவர் பண்டு-மம்தா தம்பதி என தெரியவர கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவர பண்டு, மம்தா, மீரா, நீரஜ், கிர்தார் யாதவ் ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Contact Us