இத்தாலியில் தனது இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு இலங்கைப் பெண் தப்பி ஓட்டம்!!

 

இத்தாலியில் வசித்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இத்தாலியின் வெரொனா நகரத்தில் நேற்று முன்தினம் (25) இந்த சம்பவம் நடந்தது. சசித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே (33) என்பவரே தலைமறைவாகியுள்ளார். அவரது சபாடி (11), சந்தனி (3) என்ற பெண் குழந்தைகளே கொல்லப்பட்டனர்.

பிள்ளைகளை கொலை செய்த பின்னர் சசித்ரா காணாமல் போனார்.

போர்டோ சான் பான்க்ராசியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா நகராட்சியின் பாதுகாப்பு குடியிருப்பில், கடந்த ஜனவரி மாதம் முதல் சசித்ரா வசித்து வருகிறார். வெனிஸ் சிறார் நீதிபதியின் ஆணையின்படி, அவர்களின் தந்தையை விட்டு குழந்தைகள் பிரிந்து அந்த அரச குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் குழந்தைகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, அவர்கள் வசித்து வந்த அறையை விட்டு யாரும் வெளியேறாமலிருந்தார்கள். சிறுமிகள் இருவரும் பாடசாலை செல்ல வேண்டும். ஆனால் யாரும் வெளியில் வரவில்லை. இதையடுத்து, அந்த தங்குமிடத்தை பராமரிப்பவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பராமரிப்பாளர் அந்த அறைக்குள் நுழைந்த போது சிறுமிகள் படுக்கையில் இருப்பதைக் கண்டார். அவர்கள் தூங்குவது போல் தோன்றியது. ஆனால் அவர்கள் மூச்சு விடவில்லையென்பதை அவதானித்து, அவசர உதவி மையத்திற்கு தகவலளித்தார்.

மருத்துவர்கள் மற்றும் அவசரகால ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது, சிறுமிகள் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரியின் முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி சிறுமிகள், காலை 9 மணிக்கு சற்று முன்னதாகவே இறந்துள்ளனர். அவர்களின் உடலில் வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

அவர்கள் மூச்சுத்திணறச் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

அந்த குடும்பம் வாழ்ந்த பாதுகாக்கப்பட்ட குடியிருப்பைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள், நாய்கள், ட்ரோன்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் சுழியோடிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வயல், நீர்ப்பாசன கால்வாய்கள், அருகிலுள்ள ஆறு போன்ற பகுதிகளில் தேடுதல் நடந்து வருகிறது.

சசித்ராவிற்கும் கணவனிற்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.

Contact Us