மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட ஆசிரியர்; வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

பள்ளியின் மாடியில் இருந்து மாணவனின் கால்களை பிடித்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியரின் செயலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

’ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ என்று பொதுவாக கூறுவதுண்டு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கடவுளுக்கு முன்னர் ஆசிரியரை வைத்து பார்க்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த அளவிற்கு ஆசிரியர் மீது மதிப்பும், அன்பும் உண்டு. அதற்கேற்ப ஆசிரியர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சோனு யாதவ்.

இவன் மிகவும் குறும்புத்தனம் கொண்டவனாய் இருந்துள்ளான். சில சமயங்களில் எல்லை மீறி குழந்தைகளையும், ஏன் ஆசிரியர்களையும் கூட கடித்து வைத்து விடுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவனது பெற்றோர் கண்டித்தும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவனை சோனு கடித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளார்.

உடனே தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் சோனு மன்னிப்பு கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அவனை பயமுறுத்தும் நோக்கில் முதல் மாடியில் இருந்து சோனுவின் கால்களை பிடித்து தலைகீழாக தலைமை ஆசிரியர் தொங்க விட்டுள்ளார். பின்னர் ஒரு காலை மட்டும் பிடித்து கொண்டு தொங்க விட்டிருக்கிறார். அப்போது சோனு யாதவ் சத்தம் போட்டு அழுதுள்ளான்.

இதைக் கேட்டு மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். இந்த நிகழ்வை அப்பள்ளியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டதை அடுத்து பெரிதும் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மிர்சாபூர் போலீசார், தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் தந்தை கூறுகையில், ஆசிரியரின் செயல் தவறானது தான்.

ஆனால் அன்பின் காரணமாக தான் இப்படி செய்திருக்கிறார். இதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையில்லை என்பது போல் கூறியிருக்கிறார். கைதான தலைமை ஆசிரியர் பேசுகையில், சிறுவனின் தவறான செய்கையை சரிசெய்யுமாறு அவனது தந்தை என்னிடம் தெரிவித்திருந்தார். அதையொட்டியே சிறுவனை பயமுறுத்தும் வகையில் அப்படி செய்தேன். தவறான எண்ணத்தில் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Contact Us