‘நேரில் தோன்றிய தலீபான்கள் தலைவர்’…. மதப்பள்ளி முன் உரை…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியதை அடுத்து அந்நாடு முழுவதும் தலீபான்களின் கை வசம் சென்றது. குறிப்பாக தலீபான்களின் முக்கிய மற்றும் உச்சபட்ச தலைவராகவும் ஹைபதுல்லா அகுந்த்சாதா இருக்கிறார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல்களும் வெளிவராததால் அவரின் இறப்பில் மர்மம் நிலவி வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக ஹைபதுல்லா அகுந்த்சாதா மக்கள் முன்பு தோன்றினார்.

அவர் தாருல் உலூம் ஹக்கிமா மதப்பள்ளியில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இது தொடர்பாக எந்த ஒரு காணொளியோ புகைப்படமோ எடுக்கப்படவில்லை. குறிப்பாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர்களின் தரப்பில் எடுக்கப்பட்ட காணொளியானது தலீபான்களின் சமூக இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டது. அவர் அரசியல் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மதம் குறித்து முழுவதும் உரையாற்றியுள்ளார்.

குறிப்பாக தலீபான்களின் தலைவராக இருந்த முல்லா அக்தார் மன்சூர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இதனை அடுத்து அவ்வியக்கத்தின் தலைவராக ஹைபதுல்லா அகுந்த்சாதா இருந்து வருகிறார். இவர் தலீபான்களின் நீதிமன்றத் தலைவராக இருந்தவர். மேலும் 1990ஆம் ஆண்டில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போது மத விவகாரங்களில் முக்கிய முடிவு எடுத்தார்.

அதிலும் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து தண்டனை அளிப்பது, பெண்களுக்கு கல்வி கற்க தடை விதிப்பது போன்ற கடுமையான சட்டங்களை விதித்தார். தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் இவரின் கீழ் அரசு செயல்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும் தலீபான்கள் வெளியிட்ட அமைச்சரவைப் பட்டியலில் இவர் பெயர் இடம் பெறவில்லை.

Contact Us