கணவன் உளறல் சத்தத்தை சகிக்காத மனைவி – போர்வையை போட்டு அழுத்தியதில் பலி

 

குடித்துவிட்டு வந்து உளறிக் கொண்டிருந்த கணவரின் செயலை சகிக்க முடியாத மனைவி போர்வையை போட்டு அழுத்தியதில் கணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். ஆனால், கணவன் மயக்கம் வந்து தூங்குகிறார் என்று நினைத்திருக்கிறார் மனைவி. தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

தாளமுத்து நகர் அட்ட காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கூலித் தொழிலாளியான ஆறுமுகம் குடித்துவிட்டு வந்து வீட்டில் சத்தம் போட்டிருக்கிறார். மனைவி சுப்புலட்சுமி சத்தம் போடக்கூடாது என்று தகராறு செய்திருக்கிறார். ஆனாலும் குடி போதையில் சத்தம் போட்டு உளறிக்கொண்டே இருந்திருக்கிறார் கணவன் ஆறுமுகம்.

தொடர்ந்து சத்தம் போட்டு உளறிக்கொண்டே இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரம் தாங்காமல் போர்வையை எடுத்து போட்டு முகத்தை மூடி அழுத்திருக்கிறார் மனைவி. கொஞ்ச நேரத்தில் ஆறுமுகத்திடம் இருந்து எந்த சத்தமும் இல்லை. அவர் மயங்கி தூங்கிவிட்டார் என்று நினைத்து மனைவி சுப்புலட்சுமியும் தூங்கியிருக்கிறார்.

காலையில் ஆறுமுகம் ரொம்ப நேரம் தூங்கியதைப்பார்த்து சந்தேகத்தில் அவரை தட்டி எழுப்பியிருக்கிறார். ஆனால் அவரது உடல் அசைவற்று கிடந்திருக்கிறது. இதனால் சந்தேகம் கொண்டு தாளமுத்து நகர் போலீசுக்கு சுப்புலட்சுமி தகவல் கொடுத்திருக்கிறார்.

போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

கணவர் போட்ட உளறல் சத்தம் தாங்க முடியாமல் போர்வையில் அழுத்தினேன். அதில் அவர் மயங்கி விட்டார். தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன் என சுப்புலட்சுமி வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனாலும் ஆறுமுகத்தின் மரணம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Contact Us