சொத்துக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்

 

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற புலிப்பாண்டி. இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் முனியசாமி(51).  இவருக்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2வது மகன் செல்லத்துரை (50) திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருகிறார். 3 வது மகன் முருகன் (45) திருமணம் முடித்து ஓட்டப்பிடாரத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் மகள்கள் கற்பகம் (40), பாக்கியலட்சுமி (38) ஆகியோர் திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார்கள். புலிப்பாண்டி தனது மூத்த மகனான முனுசாமிக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் சொத்துக்களை மற்ற இரண்டு மகன்களுக்கு மட்டும் எழுதிவைத்துள்ளார். இதன் காரணமாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.

 

இந்நிலையில் நேற்று முருகன் தான் புதிதாக வாங்கிய ஸ்கூட்டரை தனது தந்தையிடம் காண்பிக்க தெற்கு பொம்மையாபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். ஸ்கூட்டரை காண்பித்து விட்டு இரவு நேரமாகி விட்டதால் தனது தந்தையின் வீட்டில் தனது மூத்த சகோதரர் முனியசாமியுடன் தங்கியுள்ளார். அவரது தந்தை மற்றொரு வீட்டில் தூங்கியுள்ளனார். இந்நிலையில் நள்ளிரவில் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்த தனது தம்பி முருகனை, முனியசாமி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி படுகொலை செய்து விட்டு, பசுவந்தனை காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், படுகொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனியசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு தந்தை சொத்து தரமால் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்தது மட்டுமின்றி, தம்பி முருகன் ஸ்கூட்டர் வாங்கி வந்து தந்தையிடம் காண்பித்தது ஆத்திரத்தினை ஏற்படுத்தியதாகவும், தனக்கு எதுவும் தரமால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தது தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் முனியசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Contact Us