தனியார் கம்பெனி கழிவறையில் ஆண் – பெண் சடலங்கள்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் திருமுடிவாக்கம் சிட்கோவில் ஏராளமான கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு செயல்பட்டுவந்த கம்பெனி ஒன்று தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. அதன் பின்னர் அந்த கம்பெனி இதுவரை செயல்படாமல் அப்படியே இருக்கின்றது. காவலாளி மட்டும் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மேலாளர் அந்தக் கம்பெனியின் ஒரு பகுதியிலுள்ள பணியைச் செய்வதற்காக ஆட்களுடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த நிறுவனத்தின் மூன்றாவது மாடியில் துர்நாற்றம் வீசி இருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது இரண்டு கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் -பெண் சடலங்கள் கிடந்ததை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

இதை அடுத்து உடனே குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து போரூர் உதவி கமிஷனர் பழனி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் சிதிலமடைந்து கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த இரண்டு உடல்களும் 22 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், இன்னொரு உடல் பெண் என்பதும் தெரியவந்தது. ஆண் ஒரு கழிவறைகளும் பெண் மற்றொரு கழிவறையும் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. உடல் முழுவதும் அழுகி இருப்பதால் இறந்து கிடந்தவர்கள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. மேலும் இறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் தற்போது எதுவும் தெரியவில்லை.

இந்த தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் இருந்து இரவு நேரங்களில் சிலர் இந்த கம்பெனியில் உள்ள இரும்புக் கம்பிகளை திருடி சென்றது தெரிய வந்திருக்கிறது. சிலர் உல்லாசம் அனுபவிக்கவும் வந்து சென்றது தெரியவந்திருக்கிறது.

மூடிக்கிடக்கும் இந்த கம்பெனிக்குள் இருவரும் உல்லாசமாக இருக்கும்போது கம்பிகளை திருட வந்தவர்கள் கொலை செய்துவிட்டு பெண்ணை கற்பழித்து கொலை செய்தார்களா அல்லது இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என பல்வேறு கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து அதில் உள்ள தகவல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காவலாளி பக்கத்து கம்பெனிகளில் வேலை செய்பவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

மூடப்பட்டு கிடந்த தனியார் நிறுவனத்தில் ஆண்- பெண் சடலம் கிடந்தது தகவல் வெளியாகி குன்றத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us