BBQ துண்டுக்காக 4 பிள்ளையின் அப்பாவை 4 தடவை கத்தியால் குத்திக் கொன்ற 16 வயது பள்ளி மாணவன்: இது லண்டன் தானா ?

மீண்டும் சொல்கிறோம், இவர் 16 வயது தான், இவர் 15 வயது தான் என்று எண்ணிவிட வேண்டாம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது தெரியாது. இளகிய மனம் படைத்தவர்கள் இந்த செய்தியை வாசிக்க வேண்டாம். அன்று என்ன நடந்தது ? வாருங்கள் பார்கலாம். ஜேம்ஸ் கிபோன்ஸ்(36) என்ற 4 பிள்ளைகளின் அப்பா அவர். அவர் அன்றைய தினம், தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தார். அவர்கள் வீடு லேய்டன்(எசிக்ஸ்) மாநகரில் இருந்தது. தனது வீட்டுக்கு முன்னால் உள்ள ஒரு இடத்தில், வீடு அற்ற முதியவர் ஒருவர் வீதி ஓரமாக வாழ்ந்து வந்தார். அவருக்கு தான் சமைத்த BBQ துண்டுகளை கொண்டு போய் கொடுத்தார், ஜேம்ஸ். அந்த வீடு அற்ற நபர் மீது ஜேம்ஸ் இரக்கம் கொண்டவராக இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்த ஜேம்ஸ்… BBQ துண்டுகளை கொடுத்து விட்டு வந்த பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த வேளை…

அங்கே சில 15 மற்றும் 16 வயதுச் சிறுவர்கள் நின்று கொண்டு, வீடு அற்ற அந்த நபரின் உணவைப் பிடுங்கி தாம் உண்டு கொண்டு இருந்தார்கள். இதனை அவதானித்த ஜேம்ஸ் சற்று நேரம் கழித்து, இரவு 9.30 மணிக்கு மீண்டும் வெளியே சென்று, அவருக்கு சிகரட் ஒன்றை கொடுத்து விட்டு, அங்கே நின்றிருந்த சிறுவர்களை பார்த்து அந்த முதியவரை அச்சுறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் எழுந்த வாக்கு வாதத்தில், அங்கே நின்ற ஒரு சிறுவன் தனது நண்பர்களுக்கு போனைப் போட்டு மேலதிக ஆட்களை துணைக்கு அழைத்த அதேவேளை. மற்றுமொரு 16 வயதுச் சிறுவன், ஓடிச் சென்று தனது வீட்டில் உள்ள கத்தி ஒன்றை எடுத்து வந்துள்ளான். இந்த இடைவெளியில் ஏனைய சிறுவர்களும் அங்கே வந்து விட்டார்கள்.

4 பிள்ளைகளின் தந்தையான ஜேம்சை அவர்கள் தாக்கியுள்ளார்கள். கத்தியை கொண்டு வந்த 16 வயது சிறுவன் ஒன்று அல்ல 2 அல்ல, சுமார் 4 தடவை ஜேம்சை கத்தியால் ஆவேசமாக குத்தியுள்ளார். இதனால் அவர் நிலத்தில் வீழ்ந்தார். அயலவர்கள் அங்கே ஓடிவரவே, இந்த சிறுவர்கள் தப்பித்து விட்டார்கள். அம்பூலன்ஸ்சில் வந்த பரா மெடிக், வைத்தியர் எவ்வளவோ போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பரிதாபமாக தனது மகள் பிறந்த நாள் அதுவுமாக, தன் வீட்டுக்கு முன்னால் ஜேம்ஸ் இறந்து விட்டார். வலை வீசி தேடிய எசிக்ஸ் பொலிசார், குறித்த 16 வயது சிறுவனை கைது செய்து கிரவுன் நீதிமன்றில் நிறுத்தினார்கள். கடைசி வரை அவன் கொலையை ஒத்துக் கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்க….

தன்னை காப்பாற்றவே கத்தியால் குத்தியதாகவும். அது ஒரு கொலை இல்லை என்றும் சிறுவன் கடைசி வரை வாதாடி வந்தான். ஆனால் 11 பேர் அடங்கிய யூரிகள் குழுவில் 9 பேர் அவனை குற்றவாளி என்று இனம் கண்டார்கள். இதனால் 16 வயதுச் சிறுவனுக்கு கடும் தண்டனை ஒன்றை வழங்க நீதிபதி தற்போது முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் 2ம் திகதி இரவு 9.30 மணிக்கு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது. ஆனால் அதன் தீர்ப்பு இன்றைய தினம்(03) வெளியாகியுள்ளது.  வீடற்ற முதியவரின் உணவை பறித்து உண்கிறார்கள், கேட்டால் கத்தியால் குத்துகிறார்கள் ? நாம் எல்லாரும் லண்டனில் தான் இருக்கிறோமா ? இல்லை காட்டு வாசிகளை போல மாறி விட்டோமா தெரியவில்லை ?

Contact Us