அண்ணன் கள்ள உறவு – தம்பி ஓடஓட விரட்டிக் கொலை

அண்ணன் கள்ள உறவு வைத்திருந்த விவகாரத்தில் தம்பி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. மயிலாடுதுறை அருகே மேல பட்ட மங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் சதீஷ். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ஜேசிபி ஆப்பரேட்டர் ஆன சதீஷ் நேற்று மாலையில் சீனிவாசபுரம் பகுதியில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சதீஷிடம் வேண்டுமென்றே பேச்சு கொடுத்து வம்பிழுத்துள்ளனர்.

பின்னர் அடிக்க பாய்ந்துள்ளனர். கொலை செய்யும் வேகத்தில் பாய்ந்து உள்ளனர். இதைக் கண்டு அவர்களிடமிருந்து தப்பிக்க வயல்வெளியில் விழுந்து ஓடியிருக்கிறார் சதீஷ். ஆனால் ஓட ஓட அவரை விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள். இதன் பின்னர் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

பின்னர் படுகொலை குறித்து நடந்த விசாரணையில் முன்விரோதத்தால் இந்த படுகொலை நிகழ்ந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. சதீஷின் அண்ணன் வினோத், பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி இடையே கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார். இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தான் சதீஷின் வீண் வம்பிழுத்து ஓட ஓட விரட்டி அவரை குத்தி கொலை செய்திருக்கிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் பழனிவேல் அவரது மருமகன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Contact Us