பல முறை சுடப்பட்ட டெலிவரி சாரதி: வழக்கை கைவிடுவதாக அறிவித்த கனேடிய பொலிஸ்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வழக்கை பொலிசார் கைவிடுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் Coquitlam பகுதியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. டெலிவரி சாரதியான Nader Ahmadirad ஜனவரி மாதம் குடியிருப்பு ஒன்றில் டெலிவரி செய்வதற்காக சென்ற நிலையில், திடீரென்று நால்வர் கும்பல் துப்பாக்கிகளுடன் இவரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் இவரது முகம், கை என 7 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பொலிசார் சம்பவப்பகுதியில் இருந்து 40 தோட்டாக்களை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த தாக்குதலானது உண்மையில் Nader Ahmadirad குறிவைக்கப்பட்டது அல்ல எனவும், ஆனால் தவறான நேரத்தில் தவறான இடத்தில் Nader Ahmadirad சிக்கிக்கொண்டார் என பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.

மட்டுமின்றி, தாக்குதலை முன்னெடுத்த அந்த நால்வரில் ஒருவரை பொலிசாருக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை அந்த நால்வர் கும்பலில் ஒருவரையும் பொலிசார் கைது செய்யவில்லை.

Nader Ahmadirad மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த பின்னர் இன்னொரு பகுதியில் இருந்து மொத்தமாக எரிந்த நிலையில் கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டதற்கும் துப்பாகிச் சூடு சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்றே பொலிசார் கருதுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் ஏதும் சிக்காத காரணத்தால் வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக மின் அஞ்சல் மூலம் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தம்மை மிகவும் பாதித்துள்ளதாகவும், நீதி கிடைக்கும் என நம்பியிருந்த தம்மை ஏமாற்றியுள்ளதாகவும் Nader Ahmadirad தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் ஈரானில் இருந்து குடும்பத்துடன் கனடாவுக்கு குடியேறிய Nader Ahmadirad, சமீபத்தில் தான் Coquitlam பகுதிக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us