அகதிகள் பிரச்சனைக்கு…. இவர்தான் மூலகாரணம்…. போலந்து பிரதமர் குற்றச்சாட்டு….!!

வார்சா: பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்யும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமரான மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி பேசியதாவது “பெலாரஸில் இருந்து போலந்துக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் படையெடுத்து வருவதற்கு ரஷ்யாதான் தூண்டுதலாக இருந்து வருகிறது. இது ஐரோப்பிய யூனியனின் நிலைத்தன்மையினை குலைப்பதற்காக மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஆகும்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மூளையாக இருந்து செயல்படுகிறார். இதில் போலந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அகதிகளை மனித கேடயங்களாக விளாதிமீர் பயன்படுத்துகிறார்” என்று அவர் பேசினார். ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டா உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா போன்ற நாடுகளுக்கும் பெலாரஸிலிருந்து சட்டவிரோதமாக வர முயற்சி செய்யும் அகதிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உரிய ஆவணங்களின்றி போலந்துக்குள் நுழைவதற்காக அந்நாட்டு எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் முகாமிட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலும் மேற்கு மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்தும் வந்துள்ள அந்த அகதிகள், பெண்கள் குழந்தைகளுடன் கடும் குளிரில் ஆபத்தான நிலையில் அங்கு தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் தடுப்பு வேலியைத் துண்டிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதன்பின் எல்லைப் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினரை போலந்து குவித்துள்ளது. இதற்கிடையில் போலந்துக்கள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ தூண்டி வருவதாக ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுக்கு பெலாரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து அடைக்கலம் தேடி வரும் அகதிகளுக்கு தாங்கள் உரிய உதவிகளை மட்டுமே செய்து வருவதாக அந்நாடு கூறியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு பெலாரஸில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் லுகஷென்கோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து அந்நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையிலேயே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை லுகஷென்கோ தூண்டி வருவதாக கூறப்படுகிறது.

எனினும் தங்களது அரசியல் விளையாட்டில் போலந்தும் பெலாரஸும் அகதிகளை பகடைக் காய்களாக பயன்படுத்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் அகதிகளை ஐரோப்பாவுக்குள் குடியமர்த்துவதாக ஆசைகாட்டி, போலந்து எல்லைப் பகுதிக்கு அவர்கள் செல்ல பெலாரஸ் தூண்டுகிறது. மேலும் போலந்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக தங்கள் நாட்டுக்குள் வரும் அகதிகளை திருப்பி அனுப்பி வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போலந்து-பெலாரஸ் எல்லையில் அகதிகளால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பெலாரஸுடன் பேசி இந்தப் பதற்றத்தை தணிக்குமாறு புதினிடம் மெர்கெல் கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய யூனியனில் இடம் பெறாத பெலாரஸ் ரஷ்யாவுடன் மிக நெருங்கிய நட்புறவை பேணி வருகிறது.

Contact Us