அதிகரிக்கும் வரிவிதிப்புகள் மக்களுக்கான சலுகைகள் இரத்து? நாளை சமர்ப்பிக்கப்படுகிறது பட்ஜெட்

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) தெரிவித்துள்ளார். இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு செலவு 5 ஆயிரத்து 134 பில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 521 பில்லியன் ரூபாய் அரச கடனை திருப்பி செலுத்துவதற்காக செலவிடப்படும் என நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பிக்கவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் வரி விதிப்புகள் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் பிற்பகல் 2 மணிக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.23 நாள் விவாதத்திற்குப் பிறகு பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி நடைபெற உள்ளது. நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்ட உரை இதுவாகும், இது தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும்.

2022ஆம் ஆண்டுக்கான செலவீனங்கள் உட்பட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 திங்கட்கிழமை மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் அல்லது வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகி, அன்றிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி வரை சனிக்கிழமை உட்பட 16 நாட்களுக்கு விவாதிக்கப்படும்.

அதன் பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், பாதுகாப்பு அமைச்சின் செலவினத்திற்கு அதிகளவான ஒதுக்கீடு 373 பில்லியன் ரூபாவாகும். நிதி அமைச்சுக்கு 185.9 பில்லியன் ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 127.6 பில்லியன் ரூபாவும் சுகாதார அமைச்சுக்கு 153.5 பில்லியன் ரூபாவும் விவசாய அமைச்சுக்கு 243.9 பில்லியன் ரூபாவும் எதிர்வரும் வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 2505.3 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்வருடம் 2538 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்க செலவீனத்தில் 33 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

காதுகேளாதோர் சமூகம் சார்பில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தை சைகை மொழியில் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பட்ஜெட் விவாதத்தின் போது நேரடி ஒளிபரப்புடன் சைகை மொழி சாளரமும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும்.

வரவு செலவுத் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நாளை முதல் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் முழு காலப்பகுதியிலும் சகல சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக அமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் விவாதத்தின் போது பொது காட்சியகம் பொதுமக்களுக்கு திறக்கப்படாது மற்றும் பட்ஜெட் குழு அமர்வில் குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அழைக்கப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திர தூதர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான சிறப்பு விருந்தினர் காட்சியகம் நாளை திறக்கப்படவுள்ளது. பட்ஜெட் உரைக்குப் பிறகு, நிதியமைச்சர் பாரம்பரிய தேநீர் விருந்து நடத்துவார். ஆனால் அது எம்பிக்கள், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.

Contact Us