காரில் கடத்தப்பட்ட அமெரிக்க சிறுமி; டிக்டாக் சைகை மூலம் கண்டறிந்து மீட்ட காவல்துறை!

கட்டை விரலை உள்ளே மடக்கி, மற்ற விரல்களை விரித்து மூடிக் காட்டும் இந்த சைகை, பொதுவாக குடும்ப வன்முறையால் ஆபத்தில் இருப்பதை குறிக்க டிக்டாக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், அந்தப் பெண் ஏதோவோர் ஆபத்தில் இருப்பதை புரிந்துகொண்டார். கடத்தப்பட்ட அமெரிக்க பதின் வயது சிறுமி ஒருவர், டிக்டாக் மூலம், ஆபத்தில் இருக்கும்போது உதவி கேட்கும் சைகையைப் பயன்படுத்தி கடத்தல்காரரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டுள்ளார். அவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 4-ம் தேதி அமெரிக்காவின் லூயிஸ்வில்லே நகரத்திலிருந்து தென்கிழக்கில் 150 கிலோமீட்டர் தொலைவில், ஒரு டொயோட்டா காரில் 16 வயதான அந்த சிறுமி பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது சைகை மொழியின் மூலம், அருகே இருந்த பிற கார்களில் இருந்தவர்களிடம் தான் ஆபத்தில் இருப்பதை தெரிவிக்க முயன்றுள்ளார்.அதை கவனித்த காரின் ஓட்டுநர் ஒருவர், கட்டை விரலை உள்ளே மடக்கி, மற்ற விரல்களை விரித்து மூடிக் காட்டும் இந்த சைகை, பொதுவாக குடும்ப வன்முறையால் ஆபத்தில் இருப்பதை குறிக்க டிக்டாக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், அந்தப் பெண் ஏதோவோர் ஆபத்தில் இருப்பதை புரிந்துகொண்டார். தொடர்ந்து அந்த காரை ஓர் வயதான ஆண் இயக்குவதையும் கவனித்து, போலீஸுக்கு அந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த அந்த காரை மடக்கிப் பிடித்தனர். அதிலிருந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர், 61 வயதான கார் ஓட்டுநர் ஜேம்ஸ் ஹெர்ப்ரெட் பிரிக்கை கைது செய்துள்ளனர். அவர் மீது சட்டவிரோதமாக சிறுமியைக் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது தொலைபேசியில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் புகைப்படங்களும் காணொளிகளும் இருந்ததால் அவர் மீது குழந்தைகள் வதை சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக சிறுமியின் பெற்றோர் இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் தங்களுக்கு அறிமுகமானவர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடும்ப வன்முறை அல்லது பிற ஆபத்தில் இருக்கும் பெண்கள் அதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் வகையிலான இந்த சைகை கடந்த 2020-ம் ஆண்டு கனடிய மகளிர் அறக்கட்டளையால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது டிக்டாக்கில் பரவலாகக் கையாளப்பட்டது. உள்ளங்கையைக் காட்டி, கட்டைவிரலை மடக்கி, மற்ற விரல்களை திறந்து மூடுவதுதான் அந்த சைகை. டிக்டாக் வீடியோக்கள் மூலம் அந்த சைகை பற்றி தான் அறிந்ததாகவும், தான் ஆபத்தில் இருந்தபோது அதைச் செயல்படுத்தி உதவி கோரியதாகவும் தெரிவித்துள்ளார் அந்தச் சிறுமி.

Contact Us